உழைப்பை
உயிராய் நினைப்பவர்கள்
ஒருபோதும்
ஓய்வை நினைப்பதில்லை!
உழைப்பு
ஒரு செயல் அல்ல...
சேவை!
சேவையாய்
செய்யப்படுகிற எதுவும்
சிரமங்களை
பெரிதுபடுத்துவதில்லை!
சுற்றும் பூமி
சோம்பல் கொள்ளாமல்
சுற்றுவதால் தான்
இரவு பகல்
எல்லாருக்கும் கிடைக்கிறது!
துடிக்கும் இதயமும்
தொடர்ந்து
சுலாசிக்கும் நுரையிரலும்
எதை எதிர்பார்த்து
இயங்குகின்றன?
ஒளிதரும் மெழுகு
உருகுவதற்காக
வருந்துவதில்லையே!
கறை போக்கும் சோப்பு
கரைவதற்காக
கலங்கவா செய்கிறது?
அபகரிக்கப்படும் என்று
அறிந்திருந்தும்
அடைகளில் தேனை
ஆயுள் முழுக்க
தேனீ
தேடித்தானே வைக்கிறது?
இடப்படும்
எல்லா முட்டைகளும்
இனவிருத்திக்கல்ல
எனத் தெரித்தே
முட்டை இடுகின்றன
பறவைகள்!
எதிர்பார்ப்பை
தள்ளி வைத்துவிட்டு
செய்வதை
வேலையாய் எண்ணாமல்
சேவையாய் எண்ணினால்
வலிகள் இல்லாமல்
வாழ்ந்து போகலாம்!
நன்றி வளர்கவி,கோவை