அளந்து சிரியுங்க..
வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் வாய் விட்டு மனதாரச் சிரிக்கிறோம்?
வெறுமனே ஒரு மென்னகையோடு, எங்கே இதற்குமேல் சிரித்தால் காசு போய்விடுமோ என்பது போலச் சிரிக்கிறோம்.
ஜப்பான் நாட்டு மனோதத்துவப் பேராசிரியர் யோஜி கிமுரோ சிரிப்பை அளப்பதற்கு ஒரு டிஜிடல் கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார். அவர் சொல்கிறார், "வாயாற வயிறு குலுங்கச் சிரித்தால்தான் அது இயல்பான சிரிப்பு. சிரிக்கும்போது பல முறை 'ஹாஹ் ஹாஹ்' என்ற சத்தம் வெளிப்படுகிறது. தொடர்ச்சியாக இந்த சத்தம் வெளிப்பட வேண்டும். அப்படி வெளிப்பட்டால் மின்னதிர்வுகள் உடலில் பரவி சுரப்பிகள் இயங்கும் திறன் அதிகமாகும். ரத்த ஓட்டம் சீராகும். இதயத்துக்கும் வயிற்றுக்கும் இடையே உள்ள தசைகள் (உதரவிதானம்) முழு வேகத்தில் புத்துணர்ச்சி பெறும்".
குறிப்பிட்ட அளவு 'ஹாஹ் ஹாஹ்'கள் நம்மிடமிருந்து வெளிவரும்போது ஏற்படும் மின்னதிர்வுகளை இவர் கண்டுபிடுத்துள்ள டிஜிடல் கருவி அளவிடுகிறது. நகைச்சுவை உணர்வே இந்த மின்னதிர்வுகளை ஏற்படுத்தி மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கவைக்கும். அப்புறம் என்ன? 'ஹாஹ் ஹாஹ்' என்று சிரிக்க வேண்டியதுதானே! (தனியாக மட்டும் சிரிக்காதீர்கள்! வேறுமாதிரியாக நினைத்துக்கொள்ளப் போகிறார்கள்!)
அரண்டவன் கண்ணுக்கு
இரவில் தனியாக சாலையில் நடந்து செல்வதென்றாலே ஒருவித பயம். படித்த பல பேய்க்கதைகள் நினைவிற்கு வந்து சங்கடம் செய்யும். ஏன் இரவில்தான் பேய் வர வேண்டும்? பகல் என்றால் பேய்களுக்கு பயமா? இப்படி ஒரு ஆராய்ச்சி.
உண்மையில் அப்படியில்லையாம். மனிதர்களுக்குத்தான் இருளைக் கண்டால் மனபிராந்தி ஏற்படுகிறதாம். இதை அறிவியல் பூர்வமாக லண்டனில் உள்ள ஒரு ஆராய்ச்சிக் குழு நிரூபித்துள்ளது.
இருள் சூழ்ந்திருக்கும்போது நிழலைப் பார்த்து இல்லாத ஒரு உருவத்தை மூளை உருவாக்கிக்கொள்கிறது. கண்களால் காணும் காட்சி முழுமையாக மூளைக்குச் செல்வதற்குள் ஏற்படும் மாயத்தோற்றம் இது. இருளில் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு பந்துகளை வீசச் செய்தபோது வீசப்படாத மூன்றாவது பந்து ஒன்றும் வந்து மறையும். இது கண்களையும் மூளையையும் ஏமாற்றும் செயல். உண்மையில் பந்து வீசப்படாதபோது அப்படி ஒரு பந்து வீசப்பட்டதாகவும் வீசப்பட்ட பந்து மற்ற இரு பந்துகளைப்போல மறைந்து விடுவதாகவும் மனது உருவகப்படுத்திக் கொள்கிறது. கம்ப்யூட்டர் மூலமாகவும் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒரு அறையில் உள்ள கம்ப்யூட்டர் திரையின் மத்தியில் 80 மில்லி விநாடிகள் மட்டுமே தோன்றும் சிறிய பழுப்பு நிறத்திலான முக்கோணம் இன்னொரு அறையில் பதிவு செய்யப்பட்டது. இந்தச் சோதனையின்போது உண்மையில் திரையில் தோன்றிய முக்கோணத்தைவிட அதிக எண்ணிக்கையில் முக்கோணங்களை அடுத்த அறையில் இருந்த விஞ்ஞானிகளின் மூளை பதிவு செய்தது தெரியவந்தது.
இதன்மூலம் ஒளியில்லாத இடங்களில் காணப்படும் காட்சிகள் மூளையை ஏமாற்றும் வகையில் தோன்றுகின்றன. இதைத்தான் பேய் என்றும் ஆவி என்றும் மூளை கற்பனை செய்துகொள்கிறது எனச் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
குரங்கிலிருந்து பிறந்தவன்
பேச்சு என்பது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானதா? குரங்குகளால் பேச முடியாதா? ஜெர்மன் குழுவினர்கள் இப்படி ஒரு ஆராய்ச்சி நடத்தினர்.
ஆசிய குட்டைவால் குரங்குகளைக் கொண்டு பல்வேறு ஒலிகளை எழுப்பி அவற்றை குரங்குகள் உணர்கின்றனவா என்று சோதிக்கப்பட்டது. அப்போது மனிதர்களைப்போலவே குரங்குகளுக்கும் மூளையில் ஒலிகளை உணரும் பகுதி இருப்பது கண்டறியப்பட்டது. ஒலியின் தன்மைக்கேற்ப மூளையில் ஏற்படும் மாற்றங்களை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் உறுதி செய்தார்கள். இதனால் குரங்குகள் தங்கள் இனத்துடன் பல்வேறு ஒலி சமிக்ஞை மூலம் பேசிக்கொள்கின்றன. ஒவ்வொரு குரங்கின் குரலுக்கும் வித்தியாசம் கண்டு கொள்கின்றனவாம். ஆனால் இவைகளால் பிற விலங்குகள், பூச்சிகள், இடி மழையின் ஒலிகளைத் துல்லியமாக அறிய முடிவதில்லை.
இந்த ஆராய்ச்சியின் மூலம் மனிதர்களுக்குக் குரல் இழப்பு, செவித்திறன் இழப்புக்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முடியும் எனக் கருதப்படுகிறது
குடிச்சாப் போகுமா துக்கம்?
குடிப்பழக்கம் உள்ளவர்களிடமெல்லாம் காரணம் கேட்டால் கவலையை மறக்கக் குடிப்பதாகக் கூறுவார்கள். ஆனால் உண்மையில் குடிப்பதால் கவலை அதிகரிக்கத்தான் செய்யும் என்கிறது ஓர் ஆய்வு.
இரு பிரிவு எலிகளை இதற்காகத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு லேசான அளவில் மின் அதிர்வு தரப்பட்டது. அதன் பிறகு ஒரு பிரிவு எலிகளுக்கு 'எத்தனால்' (சாராயம்) கொடுத்துக் கண்காணித்தார்கள். இன்னொரு பிரிவிற்கு 'எத்தனால்' செலுத்தவில்லை. 'எத்தனால்' செலுத்தப்பட்ட எலிகளுக்கு மதுவில் இருக்கும் போதைத்தன்மை நரம்பிலேயே தங்கிவிடுகிறது. பய உணர்வு இருந்தால் அது நீங்க இரு வாரங்கள் ஆகின்றன. அதிர்ச்சி நீங்க அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால் 'எத்தனால்' செலுத்தப்படாத எலிகள் அதிர்ச்சியிலிருந்து விரைவில் மீண்டுவிடுகின்றன.
மனிதர்களிடம் சோதனை செய்தபோது கவலையைப் போக்குவதற்காக மது அருந்துவோர் அந்தக் கவலையில்தான் அதிகம் மூழ்குகின்றனர். தாங்கள் விரும்பாத சம்பவத்தை மறப்பதற்காகக் குடிப்பதாகச் சொல்லப்படும் மது அந்த விஷயத்தை நீண்ட காலம் நினைவில் நிறுத்துகிறது என அறிய வந்தது
இவ்வளவு தூரம் வந்துட்டீங்க அப்படியே இதை கிளிக்குங்க
No comments:
Post a Comment