பேய் இருக்கிறது என்ற நம்பிக்கை கிராம மக்களிடம் ஆழமாக இருக்கிறது. அதனால் தான் தமிழகக் கிராமங்களில் பேய்க்கும் வைத்தியம் பாரு,நோய்க்கும் வைத்தியம் பாரு என்ற பழமொழி ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை உலாவுகிறது.
பேய் பிடித்தவர்களிடமிருந்து பேயை விரட்டுவதற்கென்றே கிராமங்களில் பேய் ஓட்டுபவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்குக் கோடாங்கிக்காரர் என்று பெயர். பேய் என்பது என்ன? பேய் எப்படி, யாரைப் பிடிக்கிறது? எதற்காகப் பிடிக்கிறது? அது எப்படி விரட்டப்படுகிறது என்று ஒரு கோடாங்கிக்காரா¢ன் அனுபவத்தைக் கேட்டோம். திடமான மனம் கொண்டவர்கள் மட்டும் மேலே படிக்கவும்.
5.....4.....3.....2.....1.......ரெடி ஸ்டார்ட்...........
சுமதிக்கு வயது 23. இவர் தனது குடும்பத்தினரோடு அடர்த்தியான காட்டின் மையப்பகுதியில் இருந்த தென்னந்தோப்பில் ஒரு நாள் தங்கி இருக்கிறார். நள்ளிரவு 1 மணி அளவில் தென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த தனது அப்பாவிற்கு டீ போட்டு அதனைத் தான் தங்கி இருந்த மோட்டார் ஷெட் அறையில் இருந்து சற்று தொலைவில் இருந்தவருக்கு நள்ளிரவு இருட்டில் கையில் ஒரு டார்ச் லைட் உதவியோடு கொண்டு சென்றார். ஒரு புளிய மரத்தைக் கடந்த உடன் தனக்கு முன்னால் திடீரென்று ஒரு ஆண் உருவம் கொடூரமான முகத்தோடு எழுந்து தன்னை நோக்கி வருவது போல் இவரது கண்ணுக்குத் தொ¢ந்து இருக்கிறது. அடுத்த வினாடி சுமதி மிரண்டு போய் டீ கிளாசைக் கீழே போட்டு விட்டு, அலறி அடித்துக் கொண்டு ஓடி, பின் மயங்கிக் கீழே விழுந்து விட்டார். பின் தனது மகளைத் தேடி வந்த பெற்றோர் மகளைக் கண்டு பிடித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அதன் பின் சுமதிக்கு ஒன்றும் செய்யவில்லை. பின் அவருக்குத் திருமணம் செய்யப்பட்டது. அதன் பின்பு தான் சுமதி காட்டில் பார்த்துப் பயந்த திகில் வேலை செய்ய ஆரம்பித்து இருக்கிறது. கணவனை அருகில் நெருங்கவே விடாத சுமதி நள்ளிரவில் எழுப்பும் அபாயக் குரலைக் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மிரண்டு போய் இருக்கின்றனர். அதன் பின்பு சுமதியின் தாய் வீட்டிற்கு அவர் அழைத்து வரப்பட்டு அவருக்குப் பேய் ஓட்ட கோடாங்கிக்காரர் சுடலைமாடனை அழைத்து வந்தனர். பேய் ஓட்டுவதை நோ¢ல் பாருங்கள் என்று நம்மை அழைத்த சுடலைமாடன் போட்டோ எதுவும் எடுக்கக் கூடாது என்று கட்டளையிட்டார். நீண்ட தலை முடி, தாடி, வெற்றிலைக் கறையால் சிகப்பு நிறமாக மாறி இருக்கும் பற்கள் என அவரே சற்றுக் கொடூரமாகத்தான் காட்சி அளிக்கிறார்.
“பொதுவாக உருவம் இருக்கிறதோ இல்லையோ பேய் என்பது உலகில் இருக்கத் தான் செய்கிறது. அவற்றை துர்தேவதைகள் என்று நாங்கள் அழைக்கிறோம். இந்த துஷ்ட தேவதைகள் அனைத்து நேரங்களிலும் உலாவுவதில்லை. நள்ளிரவு நேரங்களில் தான் இவைகள் உலாவுகின்றன. ஒரு இடத்தில் கொலை செய்யப்பட்டவர்கள், துன்பம் காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்கள், பிறர் கொடுமைக்கு ஆளாகி இறந்தவர்கள் ஆகியோ¡¢ன் ஆவிகள் துஷ்ட தேவதைகள் வடிவில் உலாவுகின்றன. அந்த உருவங்களை 5 அறிவு கொண்ட மிருகங்கள் நன்கு உணரும். அதன் படி சுமதிக்கு நள்ளிரவில் ஒரு துஷ்ட தேவதை கண்ணுக்குத் தொ¢ந்திருக்கிறது. அதனை எப்படி ஓட்டுகிறேன் பாருங்கள்” என்று சொன்ன சுடலைமாடன் நம்மை ஓரமாக உட்கார வைத்து விட்டார். பொதுவாக மது அருந்திவிட்டுத்தான் பேய் ஓட்ட ஆரம்பிக்கிறார்.
ஒரு தனி அறை, அதில் ஒரே ஒரு மெழுகுவர்த்தி விளக்கு மட்டும் மெல்லியதாக எ¡¢கிறது. அந்த அறையில் பேய் பிடித்து இருப்பதாகச் சொல்லப்படும் சுமதி தலையை வி¡¢த்துப் போட்டுத் தரையில் உடைகள் கலைந்து கிடந்தார். அவரைச் சுற்றி வயதான பெண்கள் சிலர் உட்கார்ந்திருந்தனர். பேய் ஓட்டுபவர் ஏற்கனவே சுமதி வீட்டார் வாங்கி வைத்திருந்த மல்லிகைப் பூவை எடுத்துச் சுமதி தலையில் சூட்டினார். விலை உயர்ந்த ஊதுபத்திகளைக் கொளுத்தி மணம் வீசச் செய்தார். பின் தான் கொண்டு வந்திருந்த உடுக்கையை (இது தான் கோடங்கி எனப்படுகிறது) எடுத்து, உரத்த குரலில் பேய் ஓட்டுவதற்கு என்றே இருக்கும் பக்திப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார். தரையில் கிடந்த சுமதி உடுக்கை ஒலியைக் கேட்டுத் தலை நிமிர்ந்து பார்த்தவர் திடீரென்று தலையைச் சுற்றிச் சுற்றி உட்கார்ந்த படியே ஆட ஆரம்பித்தார். அவர் ஆட ஆடக் கோடங்கிக்காரர் வேகமாக உடுக்கையை அடிக்க ஆரம்பித்தார். இப்படி சுற்றியிருந்த பெண்கள் “நீ யார் என்று சொல்லு தாயி” என்று கேட்டுக் கொண்டும், பேய் ஓட்டுபவர் பாடலுக்கு ஜால்ரா போடுவதுமாக இருந்தனர். ஆனால் சுமதி வாய் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ய்........ ஏய்........ என்ற கத்தலோடு நிறுத்திக் கொண்டார். இப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பித்த உடுக்கை அடி நள்ளிரவு 1 மணி வரை தொடர்ந்தது. சோர்வான கோடாங்கிக்காரர் மீதி ஆட்டத்தை நாளை வைத்துக் கொள்வோம் என்று சொல்லி பூஜை செய்தார். பின் அவருக்கு வாங்கி வைத்திருந்த சாராயம், 6 ஸ்பெ~ஷல் தோசை, மட்டன், சிக்கன் வகைகளை ஒரு பிடி பிடித்து விட்டு, பேய் பிடித்த சுமதி வீட்டின் திண்ணையில் படுத்துக் கொண்டார். சுமதிக்கும் குடிக்கப் பானம் கொடுத்து விட்டு அனைவரும் படுத்துக் கொண்டனர். பின் மறு நாள் பகல் 6 மணிக்கு உடுக்கை அடி ஆரம்பமானது. அதிகாலையில் அதிர்ந்த உடுக்கை ஒலி அந்தக் கிராமம் முழுவதும் கேட்டது. அன்று இரவிலும் உடுக்கை அடிப்பது தொடர்ந்தது.
அன்று தான் சுமதி வாயைத் திறந்து பேச ஆரம்பித்தார். சுவாரஸ்யமான உரையாடல் இங்கே:
சுடலை: நீ யாரு தாயி?
சுமதி: (பல்லைக் கடித்துக் கொண்டு கோபத்தோடு) நான் இசக்கியாத்தாடா
சுடலை: நீ ஏன் இந்தப் பெண்ணைப் பிடித்து இருக்கிறாய்?
சுமதி: நள்ளிரவில் நான் பசியோடு அலைந்து கொண்டிருந்தேன். அப்பொழுது இந்த மூதேவி என்னைப் பற்றிய பயம் இல்லாமல் வந்து கொண்டிருந்தாள். அதனால் தான் நான் இவளைப் பிடித்துக் கொண்டேன்
சுடலை: பாவம் இந்தப் பெண், திருமணமாகிக் கணவனோடு வாழ முடியாமல் தவிக்கிறாள். இவளை விட்டு விடு, உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்.
சுமதி: எனக்கு சீர்வா¢சையோடு, ரத்தப்பிளி காட்டிப் பொங்கல் வை. நான் மலையேறி விடுகிறேன்
சுடலை: சா¢ உனக்கு நாளை பொங்கல் வைக்கிறோம்
தனது உடுக்கையை வேகமாக அடிக்கிறார் சுடலை. சுமதி வேகமாக உடுக்கை ஒலிக்கு ஏற்ப ஆடுகிறார். பின் பழையபடி பூஜை செய்து உடுக்கை அடிப்பது நிறுத்தப்படுகிறது.
மறுநாள் இசக்கியாத்தா தெய்வத்திற்குச் சீர் வா¢சை என்று உயிருடன் இருக்கும் ஒரு சேவல், சோப்பு, சீப்பு, கண்ணாடி, பவுடர், கொட்டாம்பட்டி, சேலை, தரமான மல்லிகைப் பூ, சாராயம், 6 முட்டைகள், எலுமிச்சம் பழம் என்று பல பொருட்கள் வாங்கப்படுகின்றன. பின் சுமதி சுமப்பதற்கு என்று சிறு கல் தயார்படுத்தப்பட்டு அதனைச் சுமதியின் தலையில் வைத்து அவரை ஊர்வலமாக ஒரு புளிய மரத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். புளியமரம் வரும் வரை சுமதிக்கு 10க்கும் மேற்பட்ட சாட்டை அடி பேய் ஓட்டுபவரால் கொடுக்கப்படுகிறது. பின் சுமதி சுமந்து வரும் கல்லைக் கீழே போட்டு விட்டு அந்தப் புளியமரத்தில், கொண்டு வந்த சீர் வா¢சைகளைக் கட்டி விட்டு, சேவலை அறுத்து ரத்தம் காட்டிப் பொங்கலும் வைக்கப்பட்டுப் பின் சுமதியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். இங்கு தான் ஓர் அதிசயத்தை நாம் கவனிக்க வேண்டும். மேற்சொன்ன சடங்குகள் நிகழ்ந்த உடன் சுமதி தனது கணவனைப் பார்த்து வெட்கப்படுகிறார். அனைவா¢டமும் சகஜமாகப் பேசுகிறார். இதற்கு முன் பார்த்த சுமதியை விட இயல்பானவராக இருக்கிறார்.
பார்த்தீர்களா, என் பேய் ஓட்டும் திறமையை" என்று சொல்லித் தனது தலை முடியை உதறும் சுடலைமாடனுக்குப் பேய் ஓட்டியதற்காக 5000 ரூபாய் காணிக்கையாகத் தரப்படுகிறது.
பேய் ஓட்டுபவர் உடுக்கையை அடிக்க ஆரம்பித்தவுடன் சுமதியின் நெற்றியில் மை போன்ற ஒன்றை அடிக்கடி தடவுகிறார். அதே போல சுமதி பேய் ஆடும் பொழுது, உடுக்கை அடித்துக் கொண்டிருக்கும் சுடலைமாடனின் கண்கள் சுமதியின் உடல் அங்கங்களைப் பார்ப்பதும், சில சமயங்களில் சுமதியின் உடலில் விபூதியைத் தடவும் சாக்கில் அவரை வக்கிரமாகத் தடவுவதும் நமக்கு என்னவோ போல இருக்கிறது. இதனை வேடிக்கை பார்க்கும் வயதான பெண்கள் கவனித்தாலும் அதனைக் குறை சொல்லுவதில்லை. இது பற்றி காணிக்கை வாங்கிக் கொண்டு திரும்பும் சுடலைமாடனிடம் கேட்ட பொழுது, “நாங்கள் இறைவனிடம் ஆசி பெற்றவர்கள். அதனால் தான் எங்களின் உடுக்கை அடிக்கு இசக்கியாத்தா, முனியாண்டி போன்ற தெய்வங்களின் மறுவடிவமான பேய்கள் கட்டுப்படுகின்றன. நீங்கள் உடுக்கை அடித்துப் பேயை விரட்டுங்கள் பார்ப்போம். பெண்களின் உடல் முழுவதும் விபூதி தடவ வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் உடலைத் தொடுகிறேன்” என்றவா¢டம் “அப்படித் தெரியவில்லையே” என்று நாம் இழுக்க, “உனக்கு நேரம் சா¢யில்லை ஒழுங்காக வீடு போய்ச் சேர். இல்லை என்றால் உனக்கும் நான் தான் பேய் ஓட்ட வரவேண்டும்” என்று மிரட்டுகிறார்.
பேய் உண்மையிலேயே இருக்கிறதா, பெண்களுக்கு மட்டும் ஏன் பேய் பிடிக்கிறது என்று மேற்சொன்ன சம்பவத்தைச் சொல்லி மனநல மருத்துவர் சுந்தா¢டம் கேட்டோம். “பேய் என்பது உண்மை என்ற நம்பிக்கை உலகம் முழுவதிலும் இருக்கிறது. அதற்கு ஆதரவாக வரும் திரைப்படங்களும் அமோகமாக ஓடுகின்றன. ஆனால் பேய் உண்மையில் இல்லை. அது ஒரு மனப் பிரமை என்று சொல்லலாம். அதாவது மேற்சொன்ன சுமதி கதையை நாம் ஆராய்வோம். அவர் நள்ளிரவில் காட்டுப் பகுதியில் செல்லும் பொழுது ஓர் பயம் அவரது மனதில் இருந்திருக்கும். அப்பொழுது காற்றில் எதாவது மரத்தின் கிளை வேகமாக ஆடி ஒரு பேய் போன்ற பிரமை தோன்றி அவர் பயந்திருக்கலாம். அந்த பயம் ஆண்களைத் தனது பக்கத்தில் வர விடக்கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கும். பின் திருமணமாகித் தனது கணவன் அருகில் வரும் பொழுது, அந்தப் பழைய பயம் மீண்டும் வேலை செய்கிறது. அதன் காரணமாக அவர் கத்தி இருக்கலாம். ஆனால் பேய் ஓட்டியதும், அதன் பின் நடக்கும் சடங்குகளைப் பார்த்துச் சுமதி தனது உடம்பில் பேய் எதுவும் இல்லை என்ற திருப்தி அடைந்து பின் இயல்பான வாழ்க்கைக்கு வந்திருப்பார். இது தான் உண்மை. அதாவது ஒருவரின் மனநலம் பாதிக்கும் பொழுது, அவரது மனசு தான் பாதிக்கப்படும். அவரது அறிவு பாதிக்கப்படாது. சுமதியை எங்களிடம் அழைத்து வந்தாலும் குணமாக்கி இருப்போம். ஆனால் கிராம மக்கள் பேய்களையும், பேய் ஓட்டுபவர்களையும் அதிகமாக நம்புகிறார்கள். கிராமங்களில், காடுகளில் மோசமான தேவதைகள் உலாவுகின்றன என்ற நம்பிக்கை மக்களுக்கு ஆதிகாலத்திலிருந்து இருக்கிறது. இது தான் எங்களுக்குப் பொ¢ய சிக்கலாக இருக்கிறது. அதே போல் கிராமங்களில் ஆண்களை ஏன் பேய் பிடிப்பதில்லை? பெண்களை விட ஆண்கள் தான் கிராமத்தில் இரவு நேரங்களிலும் காட்டிற்குச் செல்கிறார்கள். அவர்கள் எதையும் பார்த்துப் பயப்படுவதில்லை. அதனால் அவர்கள் இயல்பாக இருக்கிறார்கள். அது சா¢, இந்தப் பேய்கள் ஏன் நகரப் பெண்களைப் பிடிப்பதில்லை? கிராமப் பெண்களை விட நகரப் பெண்கள் அழகாகவும், வனப்பாகவும் இருக்கிறார்கள் என்பது ஏன் இந்த பேய்களுக்குத் தொ¢வதில்லை? நகர்ப்பகுதியில் கோடங்கிக்காரர்கள் நுழைந்தால் அவர்களின் சாயம் வெளுத்து விடும்” என்கிறார்.
“பேய் ஓட்டுபவர்களை ஒழிக்க வேண்டும் என்று பொ¢யார் போராடியும் அவர்களை ஒழிக்க முடியவில்லை. பேய் ஓட்டுபவர்கள் சில சித்து விளையாட்டுக்களை வைத்துத் தான் பெண்களைப் பேய் ஆட வைக்கிறார்கள். பொதுவாக ஒரு இசையைக் கேட்டாலே நமக்கு ஆட வேண்டும் போல் இருக்கும். உடுக்கையின் அதிரடி ஓசையைக் கேட்டுத் தானாகவே ஆட ஆரம்பித்து விடுகிறார்கள், பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் இளகிய மனம் கொண்ட பெண்கள். பேய் ஆடும் பெண்களை எத்தனை முறை அடித்தாலும், அணைத்தாலும் கோடங்கிக்காரர்களை யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள். இம்முறைகளை ஒழிக்க வேண்டும் என்று திராவிடக் கழகம் பல தீர்மானங்கள் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினாலும் அதனை ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை” என்கிறார் திராவிடக் கழகத்தைச் சேர்ந்த தினகரன்.
“பேய் என்பது இருக்கிறது. அதனை நான் உணர்ந்து இருக்கிறேன்” என்று சொல்லும் விவசாயி ரவி, “நான் ஒரு முறை செவ்வாய்க்கிழமை வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு காட்டிற்கு இரவில் சென்று கொண்டிருந்தேன். இருட்டில் பயம் இல்லாமல் செல்லும் எனக்குப் பின்னால் ஏதோ அபாயக் குரல் எழுப்பிக் கொண்டு யாரோ வருவது போலிருந்தது. யார் என்று குரல் கொடுத்தால் அமைதியாக இருக்கும். பின் நடந்தால் உடன் சரசர என்று நடக்கும். அன்று நான் பயந்தே போய் விட்டேன். எப்படியோ சமாளித்து வீட்டிற்குத் திரும்பி விட்டேன். வந்து எனது பாட்டியிடம் சொன்ன பொழுது இசக்கியாத்தாவும், முனியாண்டி சாமியும் செவ்வாய், வெள்ளிக்கிழமை வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு சென்றால் கூடவே வருவர் என்றார். அதனை நான் அன்று உணர்ந்தேன். சோதிக்க வேண்டுமெனில் வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டு ஒரு காட்டுப் பகுதிக்குள் போய்ப் பாருங்கள் தொ¢யும்” என்கிறார் பழைய திகில் சம்பவத்தை அசை போட்டுக் கொண்டே.
இவ்வளவு தூரம் வந்துட்டீங்க அப்படியே இதை கிளிக்குங்க
2 comments:
aiyo..bayama irukkunga...ithai type pannum pothu pinnadi irunthu yaaro paakara maathiriye irukku:-(((
வணக்கம்...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்
வலைச்சர தள இணைப்பு : தைரியசாலிகள் மட்டும் வந்து இந்தப் பதிவைப் படிங்க!
Post a Comment