திருச்சியிலிருந்து புறப்பட்டு வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் பிரார்த்தனைக்காக வந்த சுப்பண்ணாவுக்கு அன்று மிகவும் சோதனையாகி விட்டது. மாலை ஆறு மணிக்கு வந்து சேர வேண்டிய பஸ், பலத்த மழையினால் பல இடங்களில் ரோட்டில் தேங்கிய குளம் குட்டைகளில் ஏறி இறங்கி ஆடி அசைந்து அவரைக் குலுக்கி எடுத்து விட்டது.
அதன் பிறகு ஏதோ ஒரு வளைவில், எதிர்ப்புறம் மிக வேகமாக வந்த பஸ்ஸில் மோதாமல் தப்பிக்க திடீரென பஸ் டிரைவர் ப்ரேக் போட்டதில் இவருக்கு நெற்றியில் சற்று பலத்த அடி. அதன் பிறகு முன் பக்க டயர் ஒன்று வெடித்துப் பஞ்சர் ஆனதில், பஸ்ஸை ஓரம் கட்டி, ஸ்டெப்னி டயர் பொருத்தியதில் வேறு தாமதம்.
போன் செய்து குருக்களிடம் தான் வருவது பற்றி ஏற்கனவே சொல்லி இருந்தது சற்று ஆறுதலாக இருப்பினும் இரவு ஒன்பது மணி ஆகி விட்டதால் கோவில் சாத்தி விடாமல் இருக்கணுமே, குருக்கள் இருக்கணுமே, ஐந்து சன்னதிகளில் ப்ரார்த்தனைப்படி இன்றைக்கே
அர்ச்சனை செய்யணுமே என்ற விசாரத்தில் கோவிலுக்குள் நுழைந்தார். நல்ல வேளையாக அவர் ப்ரார்த்தனை நல்ல படியாகவே முடிந்து வெளியே வர பதினோரு மணிக்கு மேல் ஆகி விட்டது. அவருக்குப் பசியும் வயிற்றைக் கிள்ளியது.
சுப்பண்ணா, திருச்சி டவுனில் ஒரு ஹோட்டல் நடத்துபவர். சாதாரண கிளீனர், சர்வர், சரக்கு மாஸ்டர், சமையல் காரர், மேற்பார்வையாளர் எனப் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி இன்று முதலாளியாக உள்ளவர். மிகவும் கண்டிப்பும், கறாருமானவர். தன்னிடம் வேலை
பார்ப்பவர்கள் மட்டுமின்றி, சாப்பிட வருபவர்களையும் சத்தம் போட்டு, உருட்டி, மிரட்டி, தானே இந்த உலகில் எல்லோருக்கும் படியளக்கும் பரமசிவன் என்பது போல சர்வாதிகாரம் செய்பவர். அவருடைய ஆஜானுபாகுவான உருவம் மற்றும் வயதுக்கு மரியாதை கொடுத்து, அவரிடம் எதற்கு வம்பு என அவரின் அட்டகாசத்தை அனைவரும் சகித்துக் கொண்டனர். டி•பன் என்றால் ஏதாவது இரண்டு அயிட்டங்கள் மட்டுமே தான் தயாரித்து விற்பவர். அதுவும் குறிப்பிட்ட
சில மணி நேரங்களே அந்த விற்பனை நடக்கும். ஓரளவு தரமான தயாரிப்புக்களாகவே அவை இருக்கும். அதனால் வேறு வழியில்லாமல், அந்தப் பகுதிப் பொது மக்களும் அவருடைய சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வாடிக்கையாளர்களாக இருந்து வந்தனர்.
இப்போது இரவு மணி 11.25. இந்த இரவு நேரத்தில் சாப்பிட டி•பனோ சாப்பாடோ கிடைக்காதா என்று ஏங்கித் தவித்த அவருக்கு அந்த ஒரு ஹோட்டலின் விளம்பரப் பலகையில் ட்யூப் லைட் எரிவது கண்ணில் பட்டது. அந்த ஹோட்டலை நெருங்கியதும், அங்கிருந்த அமரும் நாற்காலிகள் அனைத்தும், சாப்பிடும் மேஜைகளின் மேல் அடுக்கப்பட்டு, பெருக்கி சுத்தம் செய்து, தண்ணீர் விட்டுக் கழுவப்படுவது தெரிந்தது. உட்புறம் ஏக்கத்துடன் எட்டிப் பார்த்த அவரை, அடுப்பங்கரைப் பக்கத்திலிருந்து வாசல் பக்கம் வந்த ஒருவர் "வாங்கோ, வாங்கோ!" என வரவேற்றார்.
சுத்தம் செய்யப்பட்ட ஒரு ஓரத்து மேஜையின் முன்பு நாற்காலி ஒன்றை எடுத்துப் போட்டு, அதில் அவரை அமரச் சொல்லி •பேனைத் தட்டி விட்டு, குடிக்கத் தண்ணீர் கொடுத்து "நீங்க எந்த ஊரு, என்ன சமாசாரம், கோவிலுக்குப் போய் ஸ்வாமி தரிஸனம் பண்ணினேளா? சாப்பாடு ஆச்சா?" என்று கனிவுடன் வினவினார்.
தன் பயணக் கதையைச் சுருக்கமாக எடுத்துரைத்தவர், தனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று வினவினார்
"ஒரு பத்து நிமிஷம் பொறுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி
உள்ளே போனவர், சொன்ன படியே பத்து நிமிடத்திற்குள் அவருக்குப் பெரிய இலை ஒன்றைப் போட்டு, தண்ணீர் தெளித்து, சுடச்சுட இரண்டு ஊத்தப்பங்களும், சூடான சாம்பாரும் ஊற்றி மேலும் ஒரு சில ஊத்தப்பங்கள் எடுத்து வர உள்ளே ஓடினார். சரியான பசி வேளையில் சூடான சுவையான அந்த ஊத்தப்பங்களும் சாம்பாரும் அவருக்கு தேவாமிர்தமாக இருந்தன. ஏழெட்டு சின்னஞ்சிறு ஊத்தப்பங்கள் சாப்பிட்ட அவர் திருப்தியாக ஒரு பெரிய ஏப்பம் விட்டு மேற்கொண்டு ஒன்றும் வேண்டாம், போதும் என்று சொல்லிக் கை கழுவ உள்ளே போகும் வழியில், கண்ணாடி போட்ட அலமாரி ஒன்றில், ஒரு பெரிய அகலப் பாத்திரத்தில் சுமார் 10 இட்லியும், 4 வடைகளும், ஒரு சிறிய பாத்திரம் நிறைய வெண்பொங்கலும் இருக்கக் கண்டார். கை அலம்பி விட்டு வரும் திருச்சிக் காரருக்கு சூடான பாதாம் பாலை ஆற்றிக் கொண்டிருந்தார் அந்த ஹோட்டல் ஆசாமி.
ருசி மிக்க அந்தப் பாலையும் வாங்கி அருந்திய இவருக்கு வயிற்றில் பால் வார்த்தது போலப் பசி அடங்கி, புதுத் தெம்பு வந்தது. நன்றி தெரிவித்த அவர், "இந்தக் கடைக்கு நீ தான் முதலாளியா" என்றார்.
"இல்லை ஐயா, முதலாளி வெளியே போய் இருக்கிறார். இப்போது வந்தாலும் வரலாம்" என்றான். "கடையில் தான் ஏற்கனவே இட்லியும்,
வடையும், பொங்கலும் ரெடியாக உள்ளதே! அவற்றை விற்றுக் காசாக்காமல் எதற்கு ஊத்தப்பம் தயாரித்தாய்? என்று கேட்டார்.
"இலாபத்தை விட, இங்கு எங்களிடம் வரும் மக்களுக்குச் சிறந்த சேவை செய்வதையே எங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். அவர்கள் இங்கு வந்து சூடாக, சுவையாகச் சாப்பிட்டு வயிறார வாழ்த்துவதையே நாங்களும், எங்கள் முதலாளியும் மிகவும் விரும்புகிறோம். அந்த ஆறிப் போன இட்லியையும் வடையையும் உங்களுக்குக் கொடுத்தால், உங்கள் பசி வேண்டுமானால் தீரலாம். ஆனால் அதில் ஒரு ருசி இருக்காது. சிலருக்கு வயிற்றுக்கும் கோளாறாகும். உங்களுக்கு ஒரு திருப்தி ஏற்படாது. எங்கள் ஹோட்டலின் பெயர் கெடுவதோடு, இந்த ஊருக்கே ஒரு கெட்ட பெயரை அது ஏற்படுத்தும். இங்கு, பல வெளியூர்களிலிருந்து கோவிலுக்கு வருபவர்கள், உங்களைப் போல அகால வேளையில் பசியுடன் வருவது ரொம்பவும் சகஜம். 24 மணி நேரமும், யார் பசியென்று எங்களிடம் வந்தாலும், உணவளிக்க வேண்டியதை எங்கள் கடமையாகக் கருதுகிறோம். அதற்கு வேண்டிய மளிகை சாமான்கள், காய்கறிகள், எரிபொருட்கள், துரிதமாக சமையல் செய்ய உதவும் நவீன உபகரணங்கள் என எல்லாம் எப்போதும் தயார்
நிலையில் எங்களிடம் வைத்திருக்கிறோம். எங்களில் யாராவது ஒருவராவது இரவு முழுவதும் கடையில் கண் விழித்துக் காத்திருப்போம். பகலில் வருவோரை விட, நாங்கள் மறுத்தாலும்
கேட்காமல் இரவில் அகாலத்தில் வருவோர் அன்புடன் தரும் உபரிப் பணத்தால் தான் இலாபமே அதிகரிக்கிறது" என்று ஒரு பெரிய விளக்கம் கொடுத்தான்.
"மேலும் மிஞ்சிப் போன ஒரு சில இட்லி வடை போன்றவற்றை வாங்கிச் செல்லக் காலையில் வரும் ஏழைகளையும்நாங்கள் இல்லை எனச் சொல்லாமல், ஆதரிக்க வேண்டும்" எனவும் கூறினான் அந்த ஆசாமி.
அவன் பேச்சில் காந்தம் போல ஈர்க்கப்பட்டவர் "உனக்கு இங்கே எவ்வளவு சம்பளம் தருகிறார்கள்?" என்று கேட்டார்.
"சம்பளம்னு எதுவும் தனியாகக் கிடையாது, ஐயா! எங்களுக்குள் முதலாளி, தொழிலாளி என்ற வித்யாசமும் கிடையாது. முதல் போட்டவர் முதலாளி தான். அவரையும் சேர்த்து நாங்கள் மொத்தம் ஆறு பேர் தான் இந்தக் கடையை நிர்வகித்து நடத்தி வருகிறோம்.
எல்லோரும் ஒரே ஊர்க்காரங்க. எல்லாச் செலவும் போக மிஞ்சும் இலாபத்தில் முதல் போட்ட அவருக்குப் பாதியும், மீதியை நாங்கள் ஐந்து பேரும் சமமாகப் பிரித்துக் கொள்கிறோம்" என்றான்.
அந்த நள்ளிரவு நேரத்தில் தன் தொழில் சம்பந்தமான பல்வேறு தொழில் நுட்பங்களைப் புரிந்து கொண்ட அவர், வலுக்கட்டாயமாக ஐநூறு ரூபாய் பணத்தை அவனிடம் திணித்து விட்டுப் புறப்பட்டார், தானும் நாளை முதல் ஒரு புது மனிதனாக மாறுவதற்கு.