Pages - Menu

Apr 27, 2009

வட்டுக்கிளி - எறும்பு

வட்டுக்கிளி - எறும்பு கதை உங்களுக்குத் தெரியுமா? அதுதாங்க,. கோடை காலம் முழுதும் எறும்புக் கூட்டம் வேலை பார்க்கும். வெட்டுக்கிளி ஆடிப்பாடி ஆனந்திக்கும்.

குளிர்காலம் வந்தவுடன் எல்லா எறும்புகளுக்கும் உணவு களஞ்சியத்தில் சேர்த்து வைக்கப் பட்டிருக்கும். ஆடிப்பாடிய வெட்டுக்கிளி உணவில்லாமல் வருந்திக் கிடக்கும். அதே கதைதான். டிஸ்னி கூட கொஞ்சம் அப்படி இப்படி மாற்றி bug's life அப்படின்னு ஒரு சினிமா எடுத்தாங்களே அதே கதை தான்.

சரி சரி அந்தக் கதைக்கு இப்ப என்ன தேவை அப்படின்னு கேட்கிறீர்களா? சுறுசுறுப்புக்கும் விடா முயற்சிக்கும் எடுத்துக் காட்டாய் இருக்கும் அந்த எறும்பு இனத்தை பத்தி கொஞ்சம் உங்களுடன் பேசலாம் என்றுதான். ஜன்னல் ஓரமா மழைக்காலத்தில் உட்கார்ந்து எறும்புகள் சாரைசாரையா சுவர் ஒரமாக கறுப்புக் கோடு போட்டுக் கொண்டு போவதை பார்த்திருக்கொண்டிருக்கும் போது "உருப்படியான வேலையை போய் பாரு" ன்னு அப்பா தலையில் தட்டினது ஞாபகம் வருதா? அப்படி எறும்பு கரப்பான் பூச்சி, தேனீ வகைகளை ஆராய்ந்து பார்த்து பெரிய ஆளாயிட்டார் ஒருத்தர். சார்லஸ் டர்னர் என்ற அமெரிக்க அறிஞர் தன்னுடைய முப்பத்து மூன்றாம் வயதிலிருந்து எறும்புகளைப் பத்தி மிகத் துல்லியமா ஆராய்ந்து எழுதிய இரண்டு புத்தகங்களுக்காக சிகாகோ பல்கலை கழகம் அவருக்கு பி.எச்.டி பட்டம் வழங்கியது. இயற்கையை பற்றி இவர் சிறுவர்களுக்கு கதைகள் எழுதியிருக்கிறார். அதை எல்லாம் பாராட்டி அவர் இறந்தவுடன் உடல் ஊனமுற்ற பள்ளி ஒன்று அவர் நினைவில் செயிண்ட் லூயிசில் கட்டப்பட்டது. அட நம்ம அப்பா அன்றைக்கு தலையில் தட்டாமல் இருந்திருந்தால் நம்ம கூட இப்ப பெரிய ஆளாயிருக்கலாம் என்று தோன்றுகிறதா?

அப்ப வாங்க! அன்று விட்ட வேலையை இன்றைக்குத் தொடருவோம். கம்ப்யூட்டரை விட்டு எங்கே எழுந்து போறீங்க? ஓ சர்க்கரை பாட்டில் பக்கமா எறும்பை தேடிப் போறீங்களா? எல்லா எறும்பும் சர்க்கரையை விரும்பி சாப்பிடுவதில்லை. மத்திய மற்றும் தென் அமரிக்காவில் வாழும் ஒரு வகையின் பெயர் இலை வெட்டி எறும்பு. பெயரைப் பார்த்தவுடனே தெரிந்திருக்குமே அந்த எறும்புகளின் உணவு எது என்று? பார்ப்பதற்கு பெரியதாக இருக்கும் இந்த எறும்புகள் ஒல்லியான உடல் வாகும், நீளமான கால்களும் கொண்டவை. 0.1 அங்குலம் முதல் 0.5 அங்குலம் வரை அவற்றின் நீளம் இருக்கும். இந்த எறும்புகள் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள காடுகளில் காலம் காலமாக வசிக்கின்றன. மரங்களின் வேருக்கும் பனிரெண்டு அடி கீழே பூமிக்குள்ளே இவை வசிக்கின்றன. மண்ணுக்குள் மறைந்து இருக்கும் தொழிலாளி எறும்புகள் இரவு நேரத்தில் மண்ணை விட்டு சாரைசாரையாக வெளியே வருகின்றன. தங்களுக்கு பிடித்தமான ஒருவித இலைகளையே அவை உண்ணுவதால் தங்கள் இருப்பிடத்தைவிட்டு அவை அரை மைல் தூரம் சாரை சாரையாக படை எடுத்து வருகின்றன. கண்ணுக்குத் தெரியாத ஒருவித மணத்தை தங்களுடைய வழியில் இவைவிட்டுச் செல்கின்றன. இதன் மூலம் அவை தங்களுடைய இருபிடத்திற்கு சரியாகச் செல்ல முடியும். காட்டில் பரவிக்கிடக்கும் எல்லா இடங்களிலிருந்தும் இலைகளைச் சேகரிக்கின்றன. இப்படி தங்கள் இருப்பிடத்தைவிட்டு தொலை தூரம் வருவதால் அவர்களின் இருப்பிடத்தைச் சுற்றி இருக்கும் மரங்கள் அழிக்கப் படுவது இல்லை. என்ன ஒரு முன் ஜாக்கிரதை!

கத்திரிக்கோல் வடிவத்தில் இருக்கும் தங்களுடைய தாடையினால் இலைகளை கடித்து எடுத்துக் கொண்டு அவை மீண்டும் தங்கள் இருப்பிடத்தை நோக்கி நடக்கின்றன. ஒவ்வொரு எறும்பும் தன் எடையைவிட முப்பது மடங்கு அதிகமான எடை பளுவைத் தூக்கிச் செல்கிறது. பயணக் களைப்பில் அசதியாக இருந்தால் தான் எடுத்துவரும் இலையை பக்கத்தில் வரும் அடுத்த எறும்பிடம் கொடுத்து விடுகின்றன.

நிலத்தடியில் இலைகள் கொண்டு வரப்பட்டு ஒரு தனி அறையில் சேகரிக்கப் படுகின்றன. அங்கே இருக்கும் மற்ற தொழிலாளி எறும்புகள் இலைகளை சிறுக சிறுக மென்று ஒரு பந்தாக மாற்றுகின்றன. கடித்து எடுத்து வரும் இலைத் துண்டுகளை அப்படியே சாப்பிட்டால் அந்த எறும்புகள் இறந்துவிடும். இப்படி மென்று பந்தாக துப்புவதால் இலைகளிம் மேலிருக்கும் இலைகளின் மென்மையான பாதுகாப்பு மேல் பூச்சு அகற்றப் படுகிறது. அந்த பந்துகளிலிருந்து ஒரு வகை காளான் வளருகிறது, இந்த காளான் மட்டுமே இந்த எறும்புகளின் ஒரே உணவு. மறு நாள் இந்த வேலை தொடர்ந்து நடை பெறுகிறது. ஒரு எறும்பு புத்தில் ஐந்து மில்லியனுக்கும் மேலான எறும்புகள் வாழ்கின்றன. அவை அனைத்திற்கும் உணவு இந்தக் காளான்தான். அதனால் நிற்காமல் இந்த வேலை தினம் தினம் நடந்து கொண்டேயிருக்கிறது. இனி நாம் அட என்ன இது இயந்திர வாழ்க்கை என்று அலுத்துக் கொள்வத்ற்கு பதில் என்ன இது இலை வெட்டி எறும்பு வாழ்க்கை என்று அலுத்துக் கொள்ளலாம் போலிருக்கிறதே! என்ன சொல்கிறீர்கள்?

காளான்கள் வளரும் அறையில் ராணி எறும்பு வசிக்கிறது, தன்னுடைய கழிவுப் பொருட்களாலேயே தன்னுடைய கூட்டை அது கட்டிக் கொள்கிறது. தினம் தினம் முட்டையிடுவது மட்டுமே அதன் வேலை. ஒரு நாளுக்கு முப்பதாயிரம் முட்டைகள் இடுமாம் அம்மாடியோவ்! ஒரு குழந்தை பெறுவதற்குள்ளே இந்த பெண்கள் படும் பாடும் படுத்தும் பாடும் இருக்கிறதே! இந்த எறும்புக்கு நாம் கோயில் கட்டித்தான் கும்பிட வேண்டும்.

இந்த இலை வெட்டி எறும்புகள் சுத்ததிற்கு பெயர் போனவை. இறந்த எறும்புகள், மற்ற கழிவுகளை மண்ணுக்கடியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சேகரித்து வைக்கின்றன. சிலசமயம் மண்ணுக்கு வெளியேயையும் குவியலாகக் கொட்டி வைக்கின்றன. நம் வீட்டுக் குப்பையை அடுத்த வீட்டில் கொட்டும் தாய்மார்களும், அழுக்குத் துணிகளை சலவைக்குப் போடமால் குப்பை போல சேர்த்து வைக்கும் தந்தைமார்களும் இந்த எறும்புகளிடமிருந்து கொஞ்சம் பாடம் கற்றுக் கொள்ளலாமே?

இந்த எறும்பு இனங்கள் சேர்க்கும் குப்பை மண்ணுக்கும் மரத்திற்கும் ஒரு நல்ல உரமாகிறது. இங்கு நடக்கும் இயற்கையின் சக்கரத்தை கவனியுங்கள். பூமிக்கு மேலே எறும்புகள் இலைகளைத் தின்று புது இலைகள் துளிர்வதற்குக் காரணமாகின்றன. உள்புறத்தில் எறும்புகளின் பாதுகாப்பில் காளான்கள் எந்தவித தொந்தரவும் இல்லாமல் ஜாலியாக வளர்கின்றன. எறும்புகளுக்கு இடைவிடாது உணவு கிடைக்கிறது. காளான் மற்றும் எறும்புகளின் கழிவு பூமத்திய ரேகை பகுதி காடுகள் அடர்ந்து செழித்து வளர உரமாகின்றன. இவை அத்தனையும் நடப்பது மனித கண்ணுக்குத் தெரியாமல் மண்ணின் அடியில் நடக்கிறது. என்ன ஒரு விந்தை என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஆனால் பூமத்திய ரேகை காடுகள் அழிக்கப்பட்டு காபி தோட்டங்களாக்கப்பட்டதும் இந்த எறும்புகள் விவசாயத்தை அழிக்கும் பூச்சிகளாக கருதப்பட்டு அவற்றை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. எறும்புகளை ஏதோ ஒரு மூலையில் கொஞ்சமா சாப்பிட்டுவிட்டு போகட்டும் என்று ஏன் அந்த விவசாயிகள் நினைக்க வில்லை? அது தான் இலவசமாய் செழிப்பான் உரம் கிடைக்குதேன்னு யோசிக்கிறீர்களா? ஒரு நாளைக்கு ஒரு பசுமாடு எவ்வளவு உண்ணுமோ அந்த அளவு அந்த எறும்புகளும் இலைகளை வெட்டி எடுத்துவிடும். ஒரு உயரமான மரத்தை ஒரே நாளில் மொட்டை அடித்து விடும் திறமையும் வேகமும் இந்த எறும்புகளுக்கு உண்டு.

2002 ஆம் ஆண்டு மேமாததில் வெளிவந்த ஸ்மித்ஸ்டோனியன் பத்திரிக்கையில் இந்த எறும்புகளைப் பற்றி சொல்லிருப்பது என்ன வென்றால் "வேட்டையாடுவதைத் தவிர தானே தன் உணவை உற்பத்தி செய்து கொள்ளும் திறமை மனிதனுக்கு மட்டும்தான் உண்டு என்று நம்மால் பெருமைப் பட்டுக் கொள்ள முடியாது. ஐம்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாலேயே இந்த இலை வெட்டி எறும்புகள் காளான்களை விவசாயம் செய்து தங்களுடைய உணவாக உட்கொண்டு வந்திருக்கின்றன. மனிதனுக்கு இவை முன்னோடியாக இருந்திருக்கின்றன."

அட ! எறும்புகளிடமிருந்து சுறுசுறுப்பும், கடின உடைப்பும் தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இனி கதை சொல்ல முடியது போலிருக்கிறதே? மனிதன் விவசாயத்தைப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்தான் கண்டு பிடித்தான். அவன் இன்னும் பூச்சிகளை ஒழிப்பதற்குத் திண்டாடிக் கொண்டு இருக்கிறான். இந்த எறும்புகள் வளர்க்கும் காளான்களை எச்க்கோவோபிஸீச் என்ற இன்னோரு வகை காளான் வகை அழித்து விடுமாம். தாங்கள் பயிர் செய்த காளான்களை நமது நண்பர்களான எறும்புகள் எப்படி காப்பாற்றினார்கள் என்று கேட்கிறீர்களா? இந்த எறும்புகளின் நெஞ்சுப் புறத்தில் வெள்ளையாக ஒட்டிக் கொண்டு ஒரு பாக்டீரியா வளருகிறது அதற்குப் பெயர் ஸ்டெப்ரோ¦மைஸீஸ் ஏதோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கேன்னு பார்க்கிறீர்களா ? அது தாங்க நம்ம மருத்துவர்கள் நமக்கு எழுதிக் கொடுப்பாங்களே அந்த ஆண்டி-பயாடிக்கின் மூல காரணமே இந்த ஸ்டெப்ரோ¦மைஸீஸ் என்ற காளான்தான். என்னங்க மூக்கில் கை வைச்சிட்டு உட்கார்ந்து விட்டீர்களா? என்னே இயற்கையின் விந்தை

2 comments:

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

அடேங்கப்பா
சாதாரன எறும்பு கதை நு சொல்லி
எவ்லோ பெரிய விசயதை சொல்லிருகீங்க
மிக அருமை கோவிந்த்
தொடரட்டும் அரிய செய்திகள்

நன்றி
முருகன்
சென்னை

Suresh said...

ஒரு எறும்பு குள் இவ்வளவு பெரிய கதையா

அம்மா சாமி பெரிய ஆளு தான் நிங்க ...

உங்க பதிவுக்கு தமிழ்ஷ்ல வோட்டு போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவு படிச்சு புடிச்சா தமிழ்ஷல வோட்ட போடுங்க


ஆளும் கட்சிக்கு வோட்டு ?

http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_29.html


சிலேட்டு சின்னத்தை பார்த்து. போடுங்கம்மா ஒட்டு !

http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_28.html

DISCLAIMER

All the views and contents mentioned in this blog are merely for educational purposes and are not recommendations or tips offered to any person(s) with respect to the purchase or sale of the stocks / futures. I do not accept any liability/loss accruing from the use of any content from this blog. All readers of this blog must rely on their own discretion and neither any analyst nor any publisher shall be responsible for the outcome.

Ads Inside Post