Pages - Menu

Apr 17, 2009

இன்னா பன்னிரண்டு

நாம் மற்றவர்களிடம் பழகும் போது எப்படி நடந்து கொள்கிறோம், நமது உடல் பாஷைகள், பேசும் விதம் ஆகியவற்றைக்கொண்டே அவர்கள் நம்மை மதிப்பீடு செய்கிறார்கள்.

குறிப்பாக நாம் ஒரு வேலைக்குச் செல்லுமிடத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது நமது நடை உடை பாவனைகள் எப்படி அமைகின்றன என்பதைப் பொறுத்துத்தான் நமது வெற்றியும் தோல்வியும் அமையும். இது நாம் நடைபயில முயற்சிப்பது போலத்தான். உங்களைப் பின்பக்கமாக நடந்து போகச் சொன்னால் எவ்வளவு கடினமாக இருக்கும்? அது போலத்தான் மற்றவர்களுடன் பழகும்போது எப்படி அவர்களுடன் உறவாட வேண்டும் என்பதான பயிற்சியும். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவதற்கு முன்னால் என்னவெல்லாம் கூடாது என்பதைத் தெரிந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

நாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது? இதோ 12 மோசமான பழக்கங்கள்:

1. மற்றவர்களிடம் பேசும்போது அவர்களை நேராகப் பார்க்காமல் நிலத்தைப் பார்த்துப் பேசுவது. யாருடன் பேசுகிறோமோ அவர்களது கண்ணை நேராகப் பார்த்துப் பேசும்போதுதான் நமது வார்த்தைகளிலுள்ள உண்மையையும் நேர்மையையும் அடுத்தவருக்குப் புரியவைக்க முடியும். அதற்காக அவர்களை முறைத்துப் பார்க்கக் கூடாது.

2. நிற்கும்போதோ உட்காரும்போதோ நேராக இல்லாமல் வளைந்து கூனியிருப்பது. நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் மற்றவர்களை உங்கள் பால் ஈர்க்க அவசியம். அது உங்களுக்கு உங்கள்மேல் உள்ள தன்னம்பிக்கையைக் காட்டும்.

3. முகத்தைச் சிடுசிடுவென வைத்துக்கொண்டு முறைப்புடன் பேசுவது. இது யாருக்குமே பிடிக்காது, உங்களுக்கு பேசப் பிடிக்கவில்லையானால் அவர்களுடன் பேசுவதைத் தவிருங்கள், பேசும்போது முகத்தில் ஒரு புன்னகையைத் தவழவிடுங்கள். அது உங்கள் தன்னம்பிக்கையைக் காட்டுவதோடு உங்களோடு உறவாடுபவருக்கும் ஒரு உற்சாகத்தை அளிக்கும்.

4. யாராவது புதியவர்களைப் பார்த்தால் முகத்தைத் திருப்பிக்கொள்வது. உங்கள் பெற்றோர்கள் உங்களது சிறு வயதில் புதியவாராக யாராவது இருந்தால் அவருடன் பழகாதே என்று சொல்லிக் கொடுத்திருக்கலாம். ஆனால் நீங்கள் இப்பொது வளர்ந்து விட்டிர்கள். யாருடன் பேசும்போதும் நீங்கள் என்ன பேசுவது என்று பேசத் திணறாமல் அவர்களுடன் சரளமாக உரையாடுவது உங்களது உறவுகளை மேம்படுத்தும். சந்திப்பவர்கள் பரிச்சயமில்லாதவராக இருந்தாலும் கூச்சமில்லாமல் பேசப் பழகுங்கள்.

5. நீங்கள் மற்றவர்களது மனதில் ஏற்படுத்தும் முதல் முத்திரைதான் உங்களோடு உறவாடுபவர்களது நினைவில் எப்போதும் நிலைத்து நிற்கும். அதை வைத்துத்தான் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள். அதனால் முதல் சந்திப்பிலேயே மற்றவர்களைக் கவருமாறு நடந்துகொள்வது மிகவும் அவசியம்.

6. மிகவும் சங்கோஜத்துடன் அதிகமாகப் பேசாமலிருப்பது. வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமானால் மற்றவர்களிடம் உறவாடும்போது நன்கு சகஜமாகப் பேசத் தெரிய வேண்டும். எண்ணங்களைத் தங்குதடையில்லாமல் வெளிப்படுத்த வேண்டும். அதற்காக வளவளவென்று பேசி 'இவன் எப்போது வாயை மூடுவான்' என்று மற்றவர்கள் நினைக்கும்படி செய்யக் கூடாது. வார்த்தைகளை அளந்து சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, அழகாகப் பேச வேண்டும். அசந்தர்ப்பமாக ஏதாவது பேசி, தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்தக் கூடாது. முக்கியமாக நீங்களே உங்கள் பேச்சைக் கேட்க வேண்டும். மனதில் தோன்றுவதை யெல்லாம் கண்டபடி உளறக் கூடாது.

7. மற்றவர்கள் பேசும்போது அவர்கள் பேச்சில் கவனமில்லாமல் இருப்பது. அடுத்தவர்கள் பேசும்போது காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவர்கள் பேசும்போது எங்கோ கவனத்தைச் செலுத்திவிட்டு, அவர்கள், 'நான் சொல்வது சரிதானே' என்று கேட்கும்போது என்ன சொன்னார்கள் என்றுகூடத் தெரியாமல் விழிக்கக் கூடாது. அவர்களைப்பற்றி உங்களுக்கு ஏதும் அக்கறையில்லை, 'மனுஷன் மகா போர்' என்று நினைத்தால் ஏதோ பரவாயில்லை. ஆனால் முக்கியமான அலுவலக அதிகாரியிடமோ அல்லது மிகவும் வேண்டியவருடனோ பேசும்போது மனதை அங்கும் இங்கும் அலைய விடதீர்கள். கேட்கும் விஷயத்தில் கவனமாக இருங்கள்!

8. சொந்தக்காரர்களுடன் அல்லது நண்பர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமலிருப்பதைத் தவிர்க்க வேண்டும். எல்லோரிடமும் நல்ல உறவு வைத்திருக்க அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பது அவசியம். அவ்வப்போது அவர்களது பிறந்த நாள், மணநாள் இவைகளைக் குறித்து வைத்துக்கொண்டு, வாழ்த்துத் தெரிவித்து, அவர்களுடன் ஏதாவது வகையில் தொடர்பு வைத்திருக்க வேண்டும். அதற்காக தினமும் பேச வேண்டும் என்பது அவசியமில்லை. நீங்கள் ஒருவர் இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு அவ்வப்போது நினைவு படுத்திக்கொண்டிருந்தால் சரி!

9. உற்சாகமில்லாமல் சோர்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் இருக்கும் சூழ்நிலை இறுக்கமாக இருக்கும்போது அந்த இறுக்கத்தைத் தளர்த்தி ஒரு நல்ல உற்சாகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். சூழ்நிலை மகிழ்ச்சிகரமாக இல்லையென்றால் அதற்குப் பிறர் மீது பழிபோடுவதில் பயனில்லை. நிலைமையை சரிப்படுத்த நீங்கள் ஏதாவது செய்யுங்கள்! நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையென்றால் அதைப்பற்றி யாருக்கும் அக்கறையிருக்காது. ஒரு வேளை உங்கள் அம்மாவைத் தவிர!

10. மற்றவர்களோடு கலகலப்பாய் இல்லாமல் உம்மனாமூஞ்சியாய் இருப்பது அடுத்தபடி தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. உங்கள் நண்பர்கள், உறவினர்கள் நீங்கள் ஒரு ஜாலியான மனிதர் என்று எண்ணும்படியாக இருக்க வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களோடு சேர்ந்து பேசி வாழ்க்கையை உற்சாகமாகச் செலவிடுங்கள்!

11. உங்களுக்குள்ள பயத்தையும் தயக்கத்தையும் வெளிக்காட்டாதீர்கள். முக்கியமாக, புதிய நண்பர்களைச் சந்திக்கும்போது, உயர் பதவியில் இருப்பவர்களுடன் பேசும்போது, நேர்முகத் தேர்விற்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம்.

12. விடாப்பிடியாகத் தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று நினைப்பது. எப்போதும் திறந்த மனதோடு இருங்கள் உங்களைச் சுற்றிப் பல மதத்தினர், வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள், கொள்கையில் மாறுபட்டவர்கள் இருப்பார்கள். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். அவர்களுடன் மனக்கசப்போ அல்லது வேறுபாடோ இருந்தால் சுமுகமாகப் பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள்

kalai

6 comments:

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

வணக்கம் கோவிந்த் :)
முத்தான 12 நெறிமுறைகள் மிகமிக அருமை
சூப்பரோ சூப்பர் அப்பு :)
கலகிடீங்க:)

முருகன்-சென்னை

அசோக் நாட்டாமை said...

IT IS THE HABITS REALLY TO FOLLOW ... I ALSO TRY TO FOLLOW ATLEAST 5 ...

Maximum India said...

சிறந்த கருத்துக்களை இன்றைய காலகட்டதிற்கு ஏற்றவாறு மிகவும் எளிமையாக விளக்கி இருக்கிறீர்கள் இவற்றைப் பின்பற்றுவது சாத்தியமான ஒன்றே. தேவை கொஞ்சம் கவனம் மற்றும் ஈடுபாடு. அவ்வளவே.

தொடர்ந்து இது போல சிறந்த பதிவுகளை தரவேண்டுமென்பது எனது வேண்டுகோள்.

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

MCX Gold Silver said...

வைகரைதென்றல் அவர்களுக்கு,
உங்கள் பாராட்டிற்கும்,வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும், நன்றி நன்றி நன்றி

MCX Gold Silver said...

அசோக் நாட்டாமை அவர்களுக்கு,
வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும், நன்றி.உங்களுடன் சேர்ந்து நானும் முயற்சிகிறேன் நன்றி

MCX Gold Silver said...

Maximum india அவர்களுக்கு,
தங்களின் பாராட்டிற்கும்,வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும், நன்றி.
தலயின் கட்டளை ஏற்றுகொள்ளபடுகிறது.

DISCLAIMER

All the views and contents mentioned in this blog are merely for educational purposes and are not recommendations or tips offered to any person(s) with respect to the purchase or sale of the stocks / futures. I do not accept any liability/loss accruing from the use of any content from this blog. All readers of this blog must rely on their own discretion and neither any analyst nor any publisher shall be responsible for the outcome.

Ads Inside Post