Pages - Menu

Apr 23, 2009

கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை

எனது பெயர் நிக் வியூஜிசிக். இந்த உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கக்கூடிய கோடானுகோடி மக்களின் இதயத்தில் என்னை நீங்கா இடம்பிடிக்கச் செய்த எனது தாய், தந்தையரையும், அந்தக் கடவுளையும் நான் நன்றியுணர்வோடு இந்த நிமிடங்களில் நினைத்துப் பார்க்கிறேன்.

என்னைப் பற்றித் தெரியாத உள்ளங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். இன்று உங்கள் முன் ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த சந்தோசமான தருணத்தில் எனக்குள் இருக்கும் வலிகளை மறந்து போகிறேன். ஆனாலும் உங்களுக்காக, நான் கடந்து வந்த பாதைகளைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். அப்பப்பா! அவை உயிர் வலிக்கும் அனுபவங்கள்! உயிரோடு இதயம் கருகும் வேதனைகள்! அவை முழுக்க முழுக்க முட்களால் ஆனவை. அவமானங்கள் நிறைந்தவை, கனம் மிக்கவை. அந்த வலியை என்னைத் தவிர இந்த உலகத்தில் வேறு எவரும் அனுபவித்திருக்க முடியாது. அனுபவிக்கக் கூடாது. ஆண்டவனிடம் நான் வேண்டி நிற்பதும் அதைத்தான். போதும்! அந்த வலி என்னோடு ஒழிந்து போகட்டும்!

எல்லாத் தம்பதியரையும் போலவே அந்த இளம் கிறிஸ்தவத் தம்பதியர் ஆஸ்திரேலியா நாட்டில் மெல்பர்ன் நகரத்தில் தனது முதல் குழந்தையின் பிரசவத்திற்காக ஆயிரமாயிரம் கனவுகளோடும், கற்பனைகளோடும் காத்துக் கிடந்தனர். கடவுள் ஒரு அழகான ஆண் குழந்தையைக் கொடுத்தார். 1982-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 04-ஆம் நாள் அதிகாலைப் பொழுதில், இந்தப் பூவுலகில் புதுப் பிறவியெடுத்தத் தன் மகனை, கிறிஸ்தவப் பாதிரியாராக இருக்கும் அந்தத் தந்தை அள்ளி முத்தமிட எத்தனிக்கையில்தான் தெரிந்தது தனது பிஞ்சு மகன் கால்களும், கைகளும், விரல்களும் முழு வளர்ச்சி இல்லாமல் பிறந்திருப்பது. எந்த மருத்துவக் காரணங்களுமே சொல்லமுடியாத ஒரு வினோதமான பிறவியெடுத்த அந்தப் பாக்கியசாலி வேறு யாருமில்லை, நான்தான். என்னைப் பார்க்க ஆவலாக இருப்பீர்கள்! இதோ அது நான்தான். இந்த நிக்.

nick_1.jpg

கருவில் இருக்கும்போதே தெரிந்திருந்தால்கூட எனது பெற்றோர் தங்கள் மனதளவில் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கமுடியும். ஆனால் அனைவருடைய கேள்வியும், "கடவுள் என்பவர் கருணையுள்ளவராக இருந்திருந்தால் கை, கால்கள் இல்லா ஒரு ஜீவராசியைப் படைத்து, இந்தப் பூவுலகில் பரிதவிக்கவிட வேண்டிய அவசியம்தான் என்ன? அதுவும் ஒரு உண்மையான கிறிஸ்தவப் பாதிரியாருக்கு இப்படியொரு தண்டனையா?" என்பதுதான். என்னை மட்டும் இப்படிப் படைத்த அந்த இறைவன் எனக்குப் பிறகு என் பெற்றோருக்குப் பிறந்த தம்பி தங்கையரை அப்படிப் படைக்கவில்லை. இந்த நிமிடத்தில் என் கண்களில் கண்ணீரோடு நான் அவருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். கையும், காலும் ஏன் விரல்கள்கூட சரியாக இல்லாத ஒரு குழந்தையை அந்தப் பெற்றோர் வளர்த்தெடுக்கப் பட்ட வேதனைகள்தான் எத்தனை? அவமானங்கள்தான் எத்தனை? சில வலிகள் அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே விளங்கக்கூடியது. நான் நெடுநாள் பிழைக்க மாட்டேன் என்ற ஒரு நம்பிக்கை எனது பெற்றோர் மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆம்! நியாயம்தானே! பிறகு நான் என்னதான் வாழ்க்கை வாழ்ந்துவிட முடியும்? எதைத்தான் சாதித்துவிட முடியும்? ஆனால் மருத்துவத் தெய்வங்கள் இது "அசல் ஆரோக்கியமான குழந்தை" என்று அடித்துக் கூறிவிட்டனர்.
குறைபாடுள்ள குழந்தையைக் கொடுத்த கடவுள் கூடவே எனது பெற்றோருக்குத் தன்னம்பிக்கையையும், தளராத தைரியத்தையும் கொடுத்திருந்தார். நான் பள்ளி செல்லும் அளவுக்கு வளர்க்கப்பட்டேன் என்று சொல்வதைவிட வார்க்கப்பட்டேன் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். நான் உடலளவில் குறைபாடு உள்ளவன் என்பதாலும், உருவத்தில் வித்தியாசப்பட்டு இருப்பதாலும் ஆஸ்திரேலிய அரசு எல்லாக் குழந்தைகளோடும் சேர்ந்து படிக்க என்னை அனுமதிக்கவில்லை. இப்போது என் அம்மா அதனை எதிர்த்துப் போராடினார். தன் மகன் படும் வேதனைகளைவிட, ஆயிரம் மடங்கு அதிகம் வேதனை அனுபவித்தவராயிற்றே! அரசுடன் யுத்தமொன்றையே நடத்தினார். ஒரு வழியாக வெற்றியையும் பெற்று, இதோ நான் பள்ளிக்குச் செல்லத் தயாராகிவிட்டேன். இப்போதுதான் வாழ்க்கை என்றால் என்ன, சமுதாயம் என்றால் என்ன, அதற்குள் எத்தனை போலித்தனம், எது எதார்த்தம், எது உண்மை என்பதையெல்லாம் வாழ்ந்து பார்க்க ஆரம்பித்தேன். நான் பூக்கள் நிறைந்த பல்லக்கில் பயணிக்கவில்லை. நான் அனைத்து மாணவர்களாலும் நிராகரிக்கப்பட்டேன். கேலி பேசப்பட்டேன். சுக்கு நூறாகக் கிழித்தெறியப்பட்டேன். ஒவ்வொருவரும் என்னை முகச்சுழிப்போடு பார்க்கும்போது உயிரோடு என்னைத் தோலுரித்த வேதனையை அனுபவித்தேன். ஊனம், பாவம் என்றெல்லாம் பரிதாபப்படுவது பேச்சளவில்தான். அத்தனையும் போலித்தனமான கண்துடைப்பு என்பதை உணர்ந்தேன். அதை அனுபவிக்கும் பொழுதுதான் அந்த துக்கத்தின் ஆழம் விளங்கும். எத்தனையோ முறை என் தாயைக் கட்டி அணைத்துக்கொண்டு "எதற்காக அம்மா என்னைப் பெற்றாய்? பிறந்த அந்த நிமிடத்திலேயே என்னைக் கொன்றிருக்கக் கூடாதா?" என்று கதறியிருக்கிறேன். துடித்திருக்கிறேன். அப்போதெல்லாம் என்னைக் கட்டியணைத்துக் கண்ணீர்விட மட்டுமே முடிந்த என் அன்னையால் எந்த ஆறுதலும் கூறமுடியவில்லை. ஆறுதல் என்பது அவ்வப்போது போடும் மருந்து போன்றது.

nick_2.jpg

ஆனால் இதுபோன்ற மனவேதனையை அனுபவிக்கும்போதுதான் அதன் வீச்சு என்ன என்பது புலப்படும். காரணம் என்னை அனைவருமே கேலிப்பொருளாகத்தான் பார்த்தார்கள். என் பக்கத்தில் வருவதைக்கூட அவமானமாக நினைப்பார்கள். அருவருத்து ஒதுக்குவதைப் பார்க்கும்போது நான் அப்படியே அணு அணுவாகச் செத்துப் பிழைத்திருக்கிறேன். இவற்றையெல்லாம் என் பெற்றோரிடம் வந்து சொல்லி அவமானத்தால் எத்தனையோ முறை நான் பள்ளிக்குச் செல்லாமலே இருந்திருக்கிறேன். இதற்காகவே நான் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி சென்றிருக்கிறேன். பலமுறை நான் தற்கொலைக்குத் துணிந்திருக்கிறேன். கோபப்பட்டிருக்கிறேன், விரக்தியடைந்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் என்னை உட்கார வைத்து, பக்குவப்படுத்தி, உற்சாகப்படுத்தி, நான் அழுதால் அழுது, அரவணைத்து, சிரிக்கவைத்து, சிந்திக்கச் செய்து, ஊக்கமூட்டி என்னை, என் வயதுக்காரர்களிடம் பழகவேண்டாம், அப்படிப் பழகினால் மன அழுத்தம்தான் அதிகமாகுமென்று, என்னைவிட வயது குறைந்த குழந்தைகளோடு பழக வைத்து, பேச வைத்துப் பல நண்பர்களை எனக்கு உருவாக்கித் தந்து, என்னை இதோ உங்கள் முன் ஒரு உன்னத மனிதனாக நிற்க வைத்து, நான் பேசும் பேச்சை, தன்னம்பிக்கைச் சொற்பொழிவை ஆயிரமாயிரம் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், தொழிலதிபர்கள் அனைவரும் கேட்டுப் பிரமிக்கச் செய்த அந்த உள்ளங்கள், மனிதப்பிறவிகள் இல்லை, அவர்கள் என் தெய்வங்கள். என் பெற்றோர்கள் என்பதையும் விட எனது கண்களாய், கைகளாய், கால்களாய் எனக்கு எது வேண்டுமோ அதுவாகவோ ஆகி என்னை உங்கள் முன் நிற்கச் செய்திருக்கிறார்கள். நான் பாக்கியசாலி அல்லவா?

nick_3.jpg

ஆம்! நான் உடலளவில் மட்டுமே உங்களிடமிருந்து வேறுபடுகிறேன். எனக்குக் கை, கால்கள் மற்றும் விரல்கள் இல்லையே ஒழிய வேறென்ன இல்லை? உள்ளத்தளவில் உங்களைப்போன்ற அனைத்து உணர்வுகளும் உள்ள ஒரு சராசரி மனிதன்தான் இந்த நிக்.

எனக்குள்ளும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள், லட்சியங்கள் இருக்கின்றன. அவற்றை இதோ! என் இருபத்தைந்து வயதிற்குள் எட்டிப் பிடித்துவிடுவேன். இது சத்தியம்! எனக்கு இப்போது வயது 21. எனது 15 ஆவது வயதில் பைபிளில் ஒரு வசனத்ததைப் படித்தேன். அதிலிருந்து கடவுள், தான் இந்த உலகுக்குச் செய்ய வேண்டியதை ஒரு கண்ணிழந்தவன் மூலமாகவோ, அல்லது என்னைப் போன்ற ஒரு அசாதாரணப் பிறவி மூலமாகவோதான் செவ்வனே செய்து முடிக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டேன். நான் அந்தப் பாக்கியம் பெற்றுவிட்ட ஒரு பிறவியாகவே நினைத்துப் பெருமிதம் கொண்டேன். என் வாழ்க்கையையே நான் இந்த உலகத்துக்காக ஒப்புக் கொடுத்துவிட்டேன்.

kalai


2 comments:

Anonymous said...

God Bless you Nick...My royal salute for your confidence...
-Rajasekaran

stocks i am loving them said...

Kindly also add a follow Up link with www.niftyviews.com

DISCLAIMER

All the views and contents mentioned in this blog are merely for educational purposes and are not recommendations or tips offered to any person(s) with respect to the purchase or sale of the stocks / futures. I do not accept any liability/loss accruing from the use of any content from this blog. All readers of this blog must rely on their own discretion and neither any analyst nor any publisher shall be responsible for the outcome.

Ads Inside Post