கண்ணீர் கண்ணீர்!
கண்ணீர் என்றதும் பாச மலரில் சிவாஜி பேசும் வசனம்தான் நினைவிற்கு வரும்.
"ஆனந்தா, நான் என் கண்களையே உன்னிடம் ஒப்படைக்கிறேன்.
அதில் இனிமேல் ஆனந்தக் கண்ணீரைத்தான் பார்க்கணும்" என்று சொல்ல, ஜெமினி "அது என் கடமை" என்பார். ஆக, கண்ணீரில் இரண்டு வகை. ஒன்று ஆனந்தக் கண்ணீர்; இன்னொன்று மெகா சீரியல் கண்ணீர்.
கண்ணீரைப் பற்றி சில அறிஞர்கள் சொல்கிறார்கள்:
"கண்ணீரில் ஒரு புனிதம் இருக்கிறது. அது பலவீனத்தின் அடையாளம் அல்ல - அதுதான் உண்மையான பலம். வாயால் ஆயிரம் வார்த்தைகள் சொல்வதைவிட அதிகம் சக்தி வாய்ந்தது. ஆழ்ந்த துக்கத்தின் அடையாளம் - விளக்க முடியாத அன்பின் சின்னம்"
"எனக்கு மழையில் நனைவது பிடிக்கும். ஏனென்றால், அப்போது என் கண்களிலிருந்து வரும் கண்ணீர் தெரியாது"
"கண்ணீர் - இதயம் சொல்ல முடியாத வார்த்தைகள்"
"நான் அழுததைப் பின்னர் நினைத்துப் பார்க்கும்போது சிரிப்பு வரும். ஆனால் நான் சிரித்ததை நினைத்துப் பார்க்கும்போது ஏனோ அழுகை வருவதில்லை!"
"நண்பர்களிடம் அன்பு கண்ணீரில் வெளிப்படுவதால் அன்பிற்கு என்றும் மறைத்து வைக்கும் தாழ்ப்பாள் கிடையாது" என்று வள்ளுவர் சொல்கிறார்.
சிலர் அழுகையே வராமல் அழுவதுபோல நடிப்பார்கள். இதை நீலிக் கண்ணீர் என்று சொல்கிறார்கள். பெரியார்கூட அவர் மணியம்மையை மணந்தபோது அவரை விட்டுப் பிரிந்தவர்களை அவர்கள் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பதற்காகத்தான் 'கண்ணீர்த் துளிகள்' என்று கேலியாகக் கூறினார்! (பெண்கள் கணவனுக்கு முன்னால் பட்டுப் புடவைக்காக வடிக்கும் கண்ணீரும் இந்த வகையைத்தான் சேரும்!) சில சமயம் சிலர் நமக்கு ஆறுதல் சொல்வதுபோல பொய்யாகக் முதலைக் கண்ணீர் வடிப்பதும் கண்கூடு.
கதைகளில் கண்ணீரும் கம்பலையுமாக நின்றாள் என்று படித்ததுண்டு - ஆமாம்.. அது என்ன கம்பலை?
கண்ணீரைப் பற்றி இப்போது சீரியசாக சில விஷயங்களைப் பார்க்கலாம்.
கண்ணீர் என்ற வார்த்தையைப் படிக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
அது மன உணர்ச்சிகளின் வெளிப்பாடு என்று சொல்கிறோம். இது சரிதான். மனித இனம் ஒன்றுதான் கண்ணீரின் மூலம் உணர்ச்சிகளை வெளிக்காட்டுகிறது. மற்றவர்களிடமிருந்து ஆறுதலையும், அன்பான அரவணைப்பையும் நம் மனம் வேண்டும்போது 'ஆக்சிடாசின்' என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் கண்ணீர் வரும்போது மட்டுமே வெளிப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணீர் உணர்ச்சிகளின் வெளிப்பாடு மட்டும்தானா? இல்லை! கண்ணீருக்கு இன்னும் எவ்வளவோ காரணங்கள் இருக்கின்றன.
கண்ணீர் கண்களை சுத்தம் செய்கிறது. கண்ணீரிலிருந்து வெளிப்படும் லிசோசைம்(lysozyme) என்ற என்சைம் பாக்டீரியாக்களை அழித்து கண்ணை நோய் தொற்றுவதிலிருந்து காக்கிறது. நம்முடைய மன அழுத்ததைக் குறைக்கிறது.
கண்ணீர் வெளிப்படும்போது அதிலிருந்து வெளிப்படும் 'என்டார்ஃபின்' என்ற ரசாயனம் பற்றிப் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இது போதை தரும் மார்பின் அல்லது ஹெராயின் போன்றது. இந்த என்டார்ஃபின்கள் நாம் சிரிக்கும்போதும் வெளிப்படுகின்றன. என்டார்பின்கள் ஒரு வலி நிவாரணி. இவை உடல் வலியையும் மனவலியையும் நீக்குகின்றன. அதனால்தான் நாம் வலியால் துடிக்கும்போதோ அல்லது சோகமான நிகழ்ச்சியின்போதோ அழுகிறோம். அதோடு இந்தக் கண்ணீர் தடுப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. அதனால்தான் யாராவது மனதில் உணர்ச்சிகளைப் பூட்டி வைத்திருந்தால் "மனசுக்குள்லேயே வச்சுக்காமல் அழுது தீர்த்துடா" என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது.
கண்ணீரிலும் சிரிப்பு வரும் என்பதற்காக இந்த ஜோக்.
மனைவி ஒருநாள் இரவு தன் கணவன் படுக்கையில் இல்லாததைக் கண்டு கீழே இறங்கிப் போனாள். அங்கே சமையலறையில் கணவன் கையில் சூடான காபியுடன் ஏதோ யோசனையில் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது கண்ணில் வழியும் நீரைத் துடைத்துக் கொண்டிருந்தான். மனைவி அவனருகில் சென்று பரிவாக "என்ன ஆச்சுங்க?" என்று கேட்டாள்.
அவன், "நான் 20 வருஷங்களுக்கு முன்னால் நாம் காதலித்த அந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்" என்றான்.
மனைவி கணவன் தன் மேல் கொண்டிருக்கும் அன்பினால் அப்படியே மனமுருகி,
"ஆமாம், நினைவிருக்கிறது" என்றாள்.
"நாம் பீச்சில் பேசிக் கொண்டிருந்தபோது உன் அப்பா நம்மைப் பார்த்துவிட்டார். அப்போது அவர் 'என் பெண்ணை நீ கல்யாணம் செய்துகொள்; இல்லாவிட்டால் நான் உன்னை இருபது வருஷங்கள் ஜெயிலுக்கு அனுப்பி விடுவேன் என்றது நினைவிருக்கிறதா?" என்று கணவன் கேட்டான்.
மனைவி நினைவுபடுத்திக் கொண்டாள்.
"அப்படி ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் கூட தேவலையாக இருந்திருக்கும்; இப்போது நான் விடுதலை ஆகியிருப்பேன்" என்றான் கணவன்.
No comments:
Post a Comment