Pages - Menu

Apr 25, 2009

கடல் குதிரையும் காம உணர்வும்

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் என ஒªவையார் மானிடப் பிறப்பின் மகத்துவத்தைக் குறிப்பிடுகின்றார்.

மனித வாழ்க்கையின் இன்பங்களை, சிற்றின்பம், பேரின்பம் என இருவகைப்படுத்துகின்றனர் சான்றோர்கள். இதில் எது ஒன்று அதிகமானலும், குறைந்தாலும் வாழ்க்கை என்னும் பயிர் வாடி விடத்தான் செய்யும்.

தவறு எனத் தெரிந்தாலும், பல வேளைகளில் மனிதன் மதிமயங்கி மனங்குழம்பி நிலை தடுமாறிவிடுகிறான். ஆசைக்கு அணையிட மகான்கள் அறிவுறுத்திய போதிலும், ஆசையை அணையால் தேக்க யாருக்கும் மனமில்லாமல், அதை வெள்ளமாய்த் திறந்து விடுகின்றனர். அப்படித்தான் சிற்றின்ப ஆசையும்.

தித்திக்கும் கரும்பும் திகட்டும் என்பது அறிந்திருந்தும் ஆதாம் முதற்கொண்டு அனைவரும் செய்யும் தவறு தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ஊடகங்கள் பெருத்த இந்தக் காலகட்டத்தில், பிஞ்சிலே பழுத்த பழமாகி, வாலிபத்தில் வயதாகிவிடுகின்றனர். அவர்களுக்கான பெருமூச்சினைப் போக்க சிட்டுக் குருவியிலிருந்து, வயாகாரா வரை வரிசையில் காத்துக்கிடக்கின்றன.

வசிய மருந்துகள். மனிதர்களின் காம உணர்வைக் கூட்டும் மருந்துகள் இன்று நேற்றல்ல, பல்லாயிரம் ஆண்டுகளாகவே பல்வேறு சமூகங்களிலே புழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றன. இதில் சீனர்கள் தான் முன்னோடிகள். உடலில் ஏற்படும் அத்தனை குறைபாடுகளுக்கும் உணவிலேயே மருந்தைக் கண்டுபிடித்து வைத்தனர். இதனால் உயிர்வாழும் ஜீவராசிகள் அனைத்தும் அவர்களுக்கு ஒரு வகையில் உணவாகத் தேவைப்படுகின்றன. அந்த வரிசையில் காம இச்சையைத் தூண்டும் மருந்தாகக் கடல் குதிரை, காண்டாமிருகக் கொம்பு, நட்சத்திர ஆமைகள் எனப் பலவற்றைக் காயவைத்து பயன்படுத்துகின்றனர்.

உலகில் மொத்தம் 35 வகையான கடல் குதிரைகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளான கடற்புற்கள், பவளப்பாறைகள் நிரம்பிய இடங்களில் வாழ்கின்றன, இவற்றின் முக்கிய உணவு இறால்களாகும். கடல் குதிரைகள் தங்களின் வாலைப் புல்களில் கட்டிக்கொண்டு நிற்க முடியும். இதன் உடல் கடினமான எலும்பு போன்ற பொருள்களினால் ஆன போதிலும் நண்டு, பெங்குவின் முதலியன இவற்றை வேட்டையாடி உண்கின்றன. பெரும்பாலான மீன்கள் கடல் குதிரையைக் கண்டுகொள்வதில்லை.கடல் குதிரைக்குக் கடலில் உள்ள விரோதிகளைக் காட்டிலும், நிலத்தில் உள்ள விரோதியான மனிதன் தான் மிகுந்த தொல்லை கொடுக்கிறான். ஆம், 1992ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கின்படி அந்த ஆண்டில் மட்டும் சுமார் 20டன் கடல் குதிரைகள் உணவாக உட்கொள்ளப்பட்டதாகத் தெரிய வருகிறது. 20 டன் கடல் குதிரை உணவு என்பது சுமார் 60 இலட்சம் கடல் குதிரைகளைக் காய வைத்தால்தான் பெறமுடியும்.

ஹாங்காங் மார்க்கெட்டுகளில் காய வைத்த கடல் குதிரை ஒரு கிலோ 1200 அமெரிக்க டாலருக்கு (ரூ 53,000/-) விற்கப்படுகிறது. சீனர்கள் தான் இந்த விலை கொடுத்தும் கடல் குதிரையை வாங்கிச் சாப்பிடுகின்றனர். வேறெதற்கு, காம உணர்வைத் தூண்டத்தான்! உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா இருப்பதன் இரகசியம் இப்பொழுது புரிகிறதா உங்களுக்கு?!!!!!!!

இதில் பிரச்சனை என்னவென்றால் கடல்குதிரையின் இனப்பெருக்க வேகம் மிகவும் குறைவு. மனிதர்களுக்கு வேகத்தைத் தரும் கடல் குதிரைகளுக்குத் தான் வேகம் வருவதில்லை. இப்படியே போனால் எதிர்காலத்தில் கடல் குதிரைகள் என்கிற இனம் என்ன ஆகுமென்று யாருக்கும் தெரியாது

3 comments:

Maximum India said...

நல்ல பதிவு DG

வன் மிருகங்கள் கூட தமது பசியை ஆற்றவே மற்ற உயிரினங்களை வேட்டையாடுகின்றன. மற்ற நேரங்களில் மற்ற உயிரினங்களை துன்புறுத்துவதில்லை. ஆனால் ஏதேதோ காரணங்களை காட்டி தம் சக மனிதர்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து உயிரினங்களையும் வதைக்கும் கேடு கேட்ட மிருக ஜாதி மன்னிக்கவும் மிருகங்கள் நல்லவையே கேடுகெட்ட அரக்க ஜாதி மனித ஜாதி மட்டும்தான்.

நன்றி.

suresh said...

உலகத்திலேயே கடல் குதிரை தான் ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று கொள்ள முடியும்

வைகரைதென்றல் said...

மனிதர்களுக்கு வேகத்தைத் தரும் கடல் குதிரைகளுக்குத் தான் வேகம் வருவதில்லை. இப்படியே போனால் எதிர்காலத்தில் கடல் குதிரைகள் என்கிற இனம் என்ன ஆகுமென்று யாருக்கும் தெரியாது

என்ன கொடுமை கோவிந்த் இது

உயிர்வாழும் ஜீவராசிகள் அனைத்தும் அவர்களுக்கு ஒரு வகையில் உணவாகத் தேவைப்படுகின்றன. அந்த வரிசையில் காம இச்சையைத் தூண்டும் மருந்தாகக் கடல் குதிரை, காண்டாமிருகக் கொம்பு, நட்சத்திர ஆமைகள் எனப் பலவற்றைக் காயவைத்து பயன்படுத்துகின்றனர்.

:(
அசைவம் தவிர் :(


அருமையா இருக்கு பதிவு வாழ்த்துக்கள்

நன்றி - முருகன்

DISCLAIMER

All the views and contents mentioned in this blog are merely for educational purposes and are not recommendations or tips offered to any person(s) with respect to the purchase or sale of the stocks / futures. I do not accept any liability/loss accruing from the use of any content from this blog. All readers of this blog must rely on their own discretion and neither any analyst nor any publisher shall be responsible for the outcome.

Ads Inside Post