Pages - Menu

Apr 29, 2009

பெண்களின் 64 கலைகள்

இன்றைய நவீன யுகத்தில் பெண்கள் மிகவும் ஆவலுடன் தேர்ந்தெடுத்து நிபுணத்துவம் பெறும் கலைகள் ஏராளம். ஆனால் இவை எல்லாம் முன்பே நமது பழைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன என்றால் ஆச்சரியமாக இல்லை?

அது மட்டுமல்ல, இவற்றில் எப்படி பாண்டித்தியம் பெறுவது என்பதை விளக்கமாகக் கூறும் நூல்கள் சுவடிகளாக ஆயிரக்கணக்கில் உள்ளன.

இப்படி, பெண்களின் கலைகளாக 64 கலைகளை நமது பழைய நூல்கள் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளன. இன்று பெண்கள் ஆர்வம் காட்டுவனவற்றை அவர்கள் ஆங்கில மொழி வாயிலாகக் கற்பதால் எளிதில் புரிந்து கொள்வதற்காக ஆங்கிலத்தில் குறிப்பிடப் புகுந்தால் கீழ்க்கண்டவற்றை உடனே குறிப்பிடலாம்: டான்ஸ் (ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நடனங்கள்), கொண்டை அலங்காரம் உள்ளிட்ட ப்யூடி பார்லர், ஜெம்மாலஜி, ஆர்கிடெக்சர், டெக்னிகல் ஸ்டடீஸ், ஸ்டோரி டெல்லிங், இன்டீரியர் டெகொரேஷன், குக்கிங் வெரைட்டீஸ், கார்டனிங், கால் சென்டர், மேக்-அப் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

லலிதா சஹஸ்ரநாமத்தில் 236-வதாக வரும் நாமமான சதுஸ்சஷ்டி கலாமயி என்ற நாமம் 64 கலைகளின் ரூபமாக இருப்பவள் லலிதாம்பிகை என்று குறிப்பிடுகிறது. ரிக் வேதத்தில் பாஞ்சால மஹரிஷி இந்த 64 கலைகளைப் பற்றி முதன்முதலாகக் குறிப்பிடுகிறார். ஆக உலகின் ஆதி நூலான வேதத்திலேயே 64 கலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்! பெண்களுக்குரிய 64 கலைகளை விரிவாகக் கல்ப சூத்திரம் குறிப்பிட்டுள்ளது. (வாத்ஸாயனர் மஹரிஷி வேறு காமசூத்திரத்தில் பெண்களுக்குரிய 64 கலைகளைப் பட்டியலிட்டுள்ளார்!)

கல்பசூத்திரம் குறிப்பிடும் 64 கலைகள் வருமாறு:-

1) நாட்டியம் 2) ஔசித்யம் 3) ஓவியம் 4) வாஜித்ரம் 5) மந்திரம் 6) தந்திரம் 7) தனவ்ருஷ்டி 8) கலா விஹி 9) சம்ஸ்க்ருத வாணி 10) க்ரியா கல்பம் 11) ஞானம் 12) விஞ்ஞானம் 13) தம்பம் 14) ஜலஸ்தம்பம் 15) கீதம் 16) தாளம் 17) ஆக்ருதி கோபன் 18) ஆராம் ரோபன் 19) காவ்ய சக்தி 20) வக்ரோக்தி 21) நர லக்ஷணம் 22) கஜ பரிட்சை 23) அசுவ பரிட்சை 24) வாஸ்து சுத்தி 25) லகு வ்ருத்தி 26) சகுன விசாரம் 27) தர்மாசாரம் 28) அஞ்சன யோகம் 29) சூர்ண யோகம் 30) க்ருஹி தர்மம் 31) சுப்ரஸாதன் கர்ம 32) சோனா சித்தி 33) வர்ணிக வ்ருத்தி 34) வாக் பாடவ் 35) கர லாகவ் 36) லலித சரண் 37) தைல சுரபீகரண் 38) ப்ருத்யோபசார் 39) கோஹாசார் 40) வியாகரணம் 41) பர நிராகரண் 42) வீணா நாதம் 43) விதண்டாவாதம் 44) அங்கஸ்திதி 45) ஜனாசார் 46) கும்ப ப்ரம 47) சாரி ஸ்ரமம் 48)) ரத்னமணி பேதம் 49) லிபி பரிச்சேதம் 50) வைக்ரியா 51) காமா விஷ்கரண் 52) ரந்தன் 53)கேஸ பந்தன் 54) ஷாலி கண்டன் 55) முக மண்டன் 56) கதா கதன் 57) குஸ¤ம க்ரந்தன் 58) வர வேஷ 59) சர்வ பாஷா விசேஷ 60) வாணிஜ்ய விதி 61) போஜ்ய விதி 62) அபிதான பரிஞான் 63) ஆபூஷண தாரண் 64) அந்த்யாக்ஷ¡ரிகா

இவற்றில் பொருள் விளங்காமல் இருக்கும் கலைகளைப் பற்றி மட்டும் இங்கு ஓரிரு வரிகளில் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

ஔசித்யம் என்றால் சரியானவற்றை, தகுந்தவற்றைத் தேர்ந்தெடுக்கும் அறிவு . இந்த ஒரு கலையிலேயே ஷாப்பிங்கில் பொருள்களைத் தேர்ந்தெடுப்பது முதல் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது வரை எல்லாமே அடங்கி விடும்! வாஜித்ரம் என்றால் வாத்ய யந்திரங்களைப் பற்றிய அறிவாகும் க்ரியா கல்பம் என்றால் இன்ன வியாதி தான் வந்திருக்கிறது என்று முடிவாக நிர்ணயம் செய்வதற்கான வழி முறைகள் பற்றிய அறிவு. ஆக்ருதி கோபன் என்றால் முக பாவங்களை மறைத்தல். ஆராம் ரோபன் என்றால் நந்தவனம் தோட்டம் உபவனம் ஆகியவற்றை உருவாக்கும் அறிவு. நர லக்ஷணம் என்றால் ஆண்கள் மற்றும் பெண்களின் சாமுத்ரிகா லக்ஷணத்தைப் பற்றிய அறிவு.

கஜ பரிட்சை என்றால் எட்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள யானைகளைப் பற்றிய அறிவு. அசுவ பரிட்சை என்றால் பத்து வகையான குதிரைகளைப் பற்றிய அறிவு. வாஸ்து சுத்தி என்றால் கட்டிடக் கலை பற்றிய முழு அறிவு. லகு வ்ருத்தி என்றால் சிறியதாக இருப்பதை பெரியதாக அபிவிருந்தி செய்யும் கலை. சகுன விசாரம் என்றால் பட்சிகள் மற்றும் இதர வகையிலான சகுனங்களை அறிந்து காரியம் வெற்றி பெறுமா எனக் கூறும் அறிவு. சூர்ண யோகம் என்றால் நல்ல மணமுள்ள திரவியங்களைக் கலக்கும் கலை.

வர்ணிக வ்ருத்தி என்றால் குணங்களை விவரித்துச் சொல்லப்படும் பெரிய கதைகளைச் சொல்லும் கலை, வாக் பாடவ் என்றால் வாக்கு சாதுரியம், பேச்சுக்கலை கர லாகவ் என்றால் கைகள் மூலம் செய்யும் தந்திரங்கள் மற்றும் கலைகள்! லலித சரண் என்றால் சிருங்கார ரஸத்தை வெளிப்படுத்தும் அங்க அசைவுகள் (கோரோகிராபி). தைல சுரபீகரண் என்றால் எட்டு விதமான எண்ணெய்களைத் தயாரிக்கும் விதம், அதை மஸாஜ் உள்ளிட்ட வகைகளில் பயன்படுத்தும் அறிவு. ப்ருத்யோபசார் என்றால் சிருஷ்டியில் உள்ள ஜட சேதனங்களுக்கான சேவை பற்றிய கலை. கோஹசார் என்றால் இல்லத்தரசிகள் இல்லங்களை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றிய கலை.

வியாகரணம் என்றால் இலக்கணம் கும்ப ப்ரம என்றால் தங்கம் போலவே தோற்றமளிக்கும் போலி தங்கத்தைத் தயாரிக்கும் அறிவு. ரத்னமணி பேதம் என்றால் ரத்னங்களின் பேதங்களை அறிவது அதை பரிட்சை செய்து பார்ப்பது உள்ளிட்ட நவரத்தினங்களைப் பற்றிய அறிவு. லிபி பரிச்சேதம் என்றால் எழுத்துக்களை அழகுற எழுதும் பல்வேறு முறைகள். காமா விஷ்கரண் என்றால் ஊடலும் கூடலும் மற்றும் இதர தாம்பத்ய விஷயங்கள் பற்றிய அறிவு.

ரந்தன் என்றால் உணவு தயாரிக்கும் கலை. கேஸ பந்தன் என்றால் கேஸப் பராமரிப்பு, கொண்டைகள் போடும் விதம் உள்ளிட்ட கேஸ சம்பந்தமான முழு அறிவு. ஷாலி கண்டன் என்றால் வசந்த காலத்தில் நடைபெறும் பெரும் கலைவிழா நடத்தும் அறிவு. கதா கதன் என்றால் கதை சொல்லும் திறமை. இது ஒரு பிரம்மாண்டமான கலை. வர வேஷ என்றால் பதி (கணவன்) போல வேஷம் போடுதல். சர்வ பாஷா விசேஷ என்றால் பல்வேறு மொழிகளில் நிபுணத்துவம் பெறுதல்.

வாணிஜ்ய விதி என்றால் அனைத்து வியாபாரங்களையும் செய்யும் திறன். அபிதான பரிஞான் என்றால் அகராதியில் உள்ளவை அனைத்தையும் அறிவது. ஆபூஷண தாரண் என்றால் ஆபரணங்களை அலங்காரமாக அணிந்து கொள்ளும் கலை. அந்த்யாக்ஷ¡ரிகா என்றால் உடனடியாக நினைவிலிருந்து கேட்ட பாடலைப் பாடும் திறன்.

மேலே உள்ள பட்டியலை ஒரு தரம் படித்தாலேயே நம் பண்டைய பெண்மணிகள் எதிலெல்லாம் சிறந்து விளங்கினார்கள் என்பது தெரிய வரும். அவர்கள் தொடாத துறை இல்லை; வெல்லாத விஷயம் இல்லை. எழிலரசிகளாக விளங்கியவர்கள் தொழிலரசிகளாகவும் விளங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான பாரதப் பெண்களின் மகிமையைச் சித்தரிக்கும் வரலாற்று நூல்கள் நம்மிடம் இல்லை என்பது தான் பரிதாபம்.

சரஸ்வதி மஹால் உள்ளிட்ட பல்வேறு உலக நூலகங்களில் அபார அறிவு தரும் ஏராளமான நமது நூல்கள் சுவடிகளாக உள்ளன. ஒவ்வொரு ஊரிலும் பெண்கள் இணைந்து ஏற்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு பெண் குழுவும் ஒரு சுவடி நூலைப் பதிப்பு நூலாக வெளியிடுவது என்று முடிவு செய்தால் புராதன கலை அறிவு இன்றைய 55 கோடி பெண்களை தேசம் முழுவதும் சென்று சேரும். இப்படிச் செய்யவில்லை என்றால் மஞ்சளை அமெரிக்கா பேடண்ட் எடுக்க முயன்ற கதை போல அனைத்து அறிவும் சுவடிகள் உள்ள அந்தந்த நாடுகள் உரிமை கொண்டாடி பேடண்ட் எடுக்கும் நிலை விரைவில் ஏற்படும்.

ஆகவே தமிழ் பெண்மணிகள் சேர்வார்களா? சேர்ந்து செய்வார்களா? சேர வேண்டும்! செய்ய வேண்டும்!

No comments:

DISCLAIMER

All the views and contents mentioned in this blog are merely for educational purposes and are not recommendations or tips offered to any person(s) with respect to the purchase or sale of the stocks / futures. I do not accept any liability/loss accruing from the use of any content from this blog. All readers of this blog must rely on their own discretion and neither any analyst nor any publisher shall be responsible for the outcome.

Ads Inside Post