ஆஸ்கர்..ஆஸ்கர்! - சில சுவையான தகவல்கள்
இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருப்பது ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய ஆஸ்கர் விருதுகள் பற்றிய செய்திகள்தான்!
ஏற்கனவே செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும் இந்த விருது வைபவம் பற்றி விலாவாரியாக விவரித்து விட்டதால் அதைப் பற்றி சொல்லப் போவதில்லை. அரைத்த மாவையே அரைக்காமல் ஆஸ்கர் விருது பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைத்தான் அள்ளிவிடப் போகிறோம்.
பெயர்க் காரணம்
ஆஸ்கர் விருது என்று சொல்லப்படும் அகாடமி விருதுகளுக்கு அந்தப் பெயர் வரக் காரணம் - திரைப்பட மற்றும் அறிவியல் அகாடமியில் நூலகராக இருந்த மார்கரெட் ஹெர்ரிக் என்பவர் அகடமி விருதுகளுக்காக கொடுக்கப்படும் சிலைகள் அவரது மாமா ‘ஆஸ்கர் பியர்ஸ்’ போலவே இருக்கிறது என்று பேச்சுவாக்கில் சொன்னதுதானாம்.
ஆஸ்கர் சிலை வடிவமைப்பு
ஆஸ்கர் சிலைகள் முதன்முதலில் வடிவமைக்கப்பட்ட ஆண்டு 1928. வடிவமைத்தவர் எம்ஜிஎம் கலை இயக்குனரான செட்ரிக் கிப்பன்ஸ் என்பவர். இந்த சிலையின் எடை ஆறே முக்கால் பவுண்டுகள். பதிமூன்றரை அங்குல உயரம். போதிய வேலை வாய்ப்பின்றி இருந்த சிற்பி முதல் தரமாக சிலைகளை உருவாக்குவதற்குப் பெற்ற ஊதியம் 500 டாலர்கள்.
பரபரப்பான நிகழ்ச்சிகள்
1973ம் ஆண்டு விழாவில் டேவிட் நிவின், எலிசபத் டெய்லரை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தபோது அதிர்ச்சி தரும் வகையில் ராபர்ட் ஓபல் என்பவர் நிர்வாணமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்தினார்.
1982ம் ஆண்டு விழாவில் தனது குறும்படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்ற Zbigniew Rybczynski (தமிழில் எப்படி சொல்வது?!) தான் இருந்த இடத்திலிருந்து குதித்து வேகமாக மேடைக்குப் போகும்போது காவல்காரரால் தடுக்கப்பட்டார். தான் ஆஸ்கர் ஜெயித்திருப்பதாகக் கூறியதையெல்லாம் அந்த உஷாரான காவலாளி பொருட்படுத்தவில்லை. கோபத்தில் அவர் காவலாளியை உதைக்க, பின்னர் ஜெயிலுக்குப் போக நேர்ந்தது.
இளமையும் முதுமையும் பெற்ற விருதுகள்
மிகச் சிறிய வயதில் ஆஸ்கர் விருது வென்ற நடிகர் ரிச்சர்ட் ட்ரேஃபஸ். அவர் வயது அப்போது 29. விருது வாங்கிய ஆண்டு 1977. அதே போல சிறிய வயதில் வென்ற நடிகை மார்லி மார்ட்டின். 1986ம் ஆண்டு விருது வாங்கியபோது அவரது வயது 21. மிகச் சிறிய வயதில் ஆஸ்கர் விருது பெற்ற பெருமை ஷிர்லி டெம்பிள் என்ற சிறுமிக்குத்தான். அவருக்கு வயது அப்போது ஆறு. 1934ல் அவரது பங்கைப் பாராட்டி சிறப்பு விருது அளிக்கப்பட்டது. ஆஸ்கர் விருது பெற்றவர்களில் மிக வயதானவர் நடிகை ஜெசிகா டேன்டி. அப்போது அவருக்கு வயது 80. ஹென்ரி ஃபொன்டா என்ற நடிகர் ஆஸ்கர் விருது பெற்றது 76ம் வயதில்.
இறப்பிற்குப் பின் பெருமை
தன் இறப்பிற்குப் பின் ஆஸ்கர் விருது பெற்ற ஒரே நடிகராக பீட்டர் ஃபின்ச் இருந்தார். அவர் ஆஸ்கர் விருது பெறும் முன்னால் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக காரில் செல்லும்போது இதய நோயால் இறந்தார். அவரது மனைவி விருதைப் பெற்றுக்கொண்டார். இந்த வருடம் ஹீத் லெட்ஜருக்கு இறந்த பின் அந்த விருது கிடைத்திருக்கிறது.
ஆணாகப் பெண்
ஆண் வேடத்தில் நடித்ததற்காகப் விருது பெற்ற ஒரே நடிகை லின்டா ஹன்ட்.
முதன்முதலில்...
ஆஸ்கரின் முதல்வர்கள் : 1927-28ல் முதலும் கடைசியுமாக ‘தி விங்ஸ்’ என்ற ஊமைப் படம் விருது பெற்றது. அதுபோல முதல் முறையாகப் விருது பெற்ற பேசும் படம் ‘பிராட்வே மெலடி’. பெற்ற ஆண்டு 1928-29.
வியப்புக்குரியவை
மிகக் குறைந்த நேரமே திரையில் தோன்றி விருது பெற்ற நடிகை ஜூடி டென்ச். தோன்றிய நேரம் வெறும் எட்டு நிமிடங்கள்!
அதிக அளவில் எட்டு ஆஸ்கர் விருதுகளை வென்றாலும். சிறந்த படம் என்பதற்காகப் பரிசு பெறாத ஒரே படம் ‘காபரே’. வருஷம் 1972.
64 முறை போட்டியிட்டு 26 முறை வென்று அதிக எண்ணிக்கையில் விருதுகளைப் பெற்றது வால்ட் டிஸ்னி.
குழப்பமோ குழப்பம்
ஆஸ்கர் சரித்திரத்தில் குழப்பமான நிகழ்வு 1934ல் நடந்தது. நில் ரோகர்ஸ் ஆஸ்கர் விருது பெற்றவர் பெயரை அழைக்கும்போது, "ஃப்ரான்க் அவர்களே, வந்து பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்றார். நடிகர் ஃப்ரான்க் கேப்ரா மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது 'லேடி ஃபார் எ டே' படத்திற்குத்தான் பரிசு கிடைத்திருக்கிறது என்று நினைத்து மேடைக்குச் சென்றார். ஆனால் பரிசு கிடைத்ததோ ஃபிரான்க் லாயிட் என்ற நடிகருக்கு. அவமானத்துடன் முகம் சிவக்க தனது இருக்கைக்குத் திரும்பினார் ஃபிரான்க் கேப்ரா.
வேண்டாம் ஆஸ்கர்
ஆஸ்கர் விருதை வேண்டாம் என்று மறுத்த முதல் நடிகர் ஜார்ஜ் ஸ்காட். காரணம், அவர் 1959ல் தனக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று நினைத்தபோது, அது 'பென் ஹர்'ல் நடித்த ஹூக் கிரிஃபித் என்ற நடிகருக்குச் சென்றுவிட்டது. அவர் சொன்னது, "நான் கோமாளி போல காட்சிப் பொருளாக நிற்பதை விரும்பவில்லை".
மார்லன் பிராண்டோவும் 1972ல் ஆஸ்கர் விருதை மறுத்தார். அவர் சொன்ன காரணம், "அமெரிக்க இந்தியர்கள் சினிமாத் துறையால் நடத்தப்படும் விதத்தை நான் விரும்பவில்லை"
kalai
1 comment:
சுவாரஸ்யமான தகவல்கள்.
வாழ்த்துக்கள் மற்றும் நன்றி DG
Post a Comment